ஐபிஎல் போட்டி இடமாற்றம்: காவிரி மேலாண்மை வாரியம் இப்போது வந்துரும்: ஆர்.ஜே பாலாஜி விமர்சனம்
ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. இப்போ காவிரி மேலாண்மை வாரியம் வந்துரும்ல என்று ஆர்.ஜே பாலாஜி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #IPL
சென்னை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையில் சென்னையில் ஐ.பி.எல். போட்டியை நடத்தவிட மாட்டோம் என அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சேப்பாக்கம் பகுதியில் போட்டியை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது.
ஆனால், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஐபிஎல் நிர்வாகம் சென்னையில் நேற்று கிரிக்கெட் போட்டியை நடத்தியது. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் அண்ணா சாலை ஸ்தம்பித்தது. அண்ணா சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4000 போலீஸார் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அடுத்தடுத்து போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகளை இடமாற்றம் செய்வது குறித்து ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், ஆர்.ஜே. பாலாஜி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து கூறியிருப்பதாவது:- “இப்போது ஐபிஎல் போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டது. மக்கள், தேசிய அளவில் கவனம் பெற விரும்பினர். அது சரியாக அமைந்ததா? இப்போ காவிரி மேலாண்மை வாரியம் வந்துரும்ல. இவர்களால் முடிந்தது என்னவெனில், காவிரியில் இருந்து கிரிக்கெட்டுக்கும், பிறகு வன்முறைக்கும் கவனத்தைத் திசை திருப்புவதுதான். எந்த ஒரு உணர்வுள்ள தமிழனும் இதுபோன்ற முறை தவறிய சூழ்ச்சிகரமான சுயநல வழிமுறைகளை ஆதரிக்க மாட்டான்.
விளையாட்டுக்கு எதிராக வன்முறையாகப் போராட்டம் நடத்தி, ஐபிஎல் ஆட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றியதை பெரிய வெற்றியாகக் கருதுவோர்களே... காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதையும் உறுதி செய்யுங்கள். முடியுமா?” இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story