மத்திய நிதி ஆணையத்திடம் தமிழக எம்.பி.க்கள் எடுத்துரைப்பார்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு


மத்திய நிதி ஆணையத்திடம் தமிழக எம்.பி.க்கள் எடுத்துரைப்பார்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 12 April 2018 3:56 AM IST (Updated: 12 April 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

15-வது நிதிக்குழு ஆய்வு வரம்பில் தமிழகத்துக்கு பாதகமான சூழல் உருவாகி இருப்பதை மத்திய நிதி ஆணையத்திடம் தமிழக எம்.பி.க்கள் எடுத்துரைக்க முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

15-வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்பின் மீது தமிழ்நாட்டின் கருத்துக்களை வடிவமைப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டங்கள் கடந்த 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்திய காரணத்தினால், 15-வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்புகளில் 1971-ம் ஆண்டு மக்கள் தொகைக்குப் பதிலாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற முடிவு தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.

பாராளுமன்றத்தில் விவாதம்

இது குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கும், மத்திய நிதி மந்திரி மற்றும் நிதி ஆணையத்துக்கும் கடிதம் எழுதி உள்ளார். இதன் தொடர்ச்சியாக, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15-வது நிதி ஆணையத்தினை நேரில் சந்தித்து, 15-வது நிதிக்குழுவின் ஆய்வு வரம்பில் உள்ள தமிழ்நாட்டிற்கு பாதகமான அம்சங்களை சுட்டிக்காட்டி அதனை திருத்திட கோரிக்கை மனுவினை அளித்து, நிதி ஆணையத்திடம் வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.

மேலும், இதுகுறித்து பாராளுமன்ற விவாதத்தின்போது தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இது தவிர, மத்திய நிதி ஆணையம் தமிழ்நாட்டிற்கு இது குறித்து விவாதிக்க வரும்போது, தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை மிக உறுதியாக எடுத்துரைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story