ராணுவ கண்காட்சி மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் நிர்மலா சீதாராமன் தகவல்


ராணுவ கண்காட்சி மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் நிர்மலா சீதாராமன் தகவல்
x
தினத்தந்தி 12 April 2018 5:30 AM IST (Updated: 12 April 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெற்று வரும் ராணுவ கண்காட்சி மூலம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

சென்னை,

இந்திய ராணுவ பாதுகாப்பு கண்காட்சி சென்னையை அடுத்த திருவிடந்தையில் நேற்று தொடங்கியது. இதை முன்னிட்டு மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நம் நாட்டில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவ பாதுகாப்பு கண்காட்சி சென்னையில் முதன்முறையாக நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திரமோடி இன்று முறைப்படி இந்த கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். அதே நேரத்தில் அவரது உண்ணாவிரதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அவரது பயணத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நானும் உண்ணாவிரதம் இருப்பேன்.

இன்று (நேற்று) தொழில் முதலீட்டாளர்களுடனான கலந்தாய்வு நடந்துள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களும், அதிகபட்சமாக உள்நாட்டு நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் இரண்டு பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழகத்தில் சென்னையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் ஏற்கனவே ஓசூர், சேலம், கோவை, சென்னை, திருச்சி ஆகியவற்றை உள்ளடக்கி பாதுகாப்பு தொழில் வழித்தடம் அமைப்பதற்கான ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. இத்திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யவும் உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் தங்களை விரிவுபடுத்திக் கொள்ள உதவுவதும் இந்த கண்காட்சியின் நோக்கம் ஆகும்.

எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று உடனடியாக தெரிவிக்க முடியாது. பாதுகாப்பு துறை சார்ந்த விஷயம் என்பதால் பல்வேறு நடைமுறைகள் பேச்சுவார்த்தைகள் ஆகியவற்றுக்கு பிறகே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் அதே நேரத்தில் இக்கண்காட்சி இங்கு நடத்தப்படுவதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உள்ளூர் வருவாய் இருக்கும்.

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு உள்நாட்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் இக்கண்காட்சியில் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அரங்குகள் அமைக்க அவர்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறைக்கான தளவாடங்களை உள்நாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்வதே நோக்கமாகும்.

ஆனாலும் உற்பத்தி தளவாடங்கள் முப்படைகளுக்கு தகுதியானது தானா என்பதை உறுதி செய்யும் அதிகாரம் ராணுவத்துக்குத்தான் உண்டு. சில பொருட்களை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அதில் நான் தலையிட முடியாது.

பாதுகாப்பு உத்திக்கான கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு இதுவரை 100-க்கும் அதிகமான கருத்துகள் பெறப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் விவாதிக்கப்பட்டு விரைவில் பாதுகாப்புக்கான கொள்கை வெளியிடப்படும். ராணுவத்தில் ஆயுத பற்றாக்குறை ஏதும் இல்லை. சமீபத்திய எனது ரஷிய சுற்றுப் பயணம் பயனுள்ளதாக அமைந்தது.

இந்த கண்காட்சியில் பங்கேற்க சீனா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சீனா ஏன் பங்கேற்கவில்லை என்பதை அவர்கள்தான் கூறவேண்டும்.

நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட கருத்து குறித்து குறிப்பாக புல்லட் புரூப் ஜாக்கெட் குறைபாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. அந்த குறைகளை நாங்கள் நிவர்த்தி செய்கிறோம். அதே சமயத்தில் பல நல்ல விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் 75 சதவீத இந்திய நிறுவனங்களே பங்கேற்றுள்ளன என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

வெளிநாடுகளில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்யும்போது அவர்களிடம் நாம் கொள்முதல் செய்யும் தொகையில் 30 சதவீதத்தை இந்தியாவில் முதலீடு செய்யும்படி அறிவுறுத்துகிறோம். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வரும்போது அவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை.

உற்பத்தி அதிகரிக்கும்

உலக வர்த்தக ஒப்பந்தப்படி ஏற்றுமதி செய்யும் உள்நாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்கப்படுவதில்லை. ஆனால் மறைமுகமாக வேறுசில சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த கண்காட்சியின் மூலம் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, உற்பத்தியும் அதிகரிக்கும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

அப்போது ராணுவத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே, ராணுவ துறை செயலாளார் சஞ்சய் மித்ரா, ராணுவ உற்பத்தித்துறை செயலாளர் அஜய் குமார், ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் செயலாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் இருந்தனர். 

Next Story