காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை மனு


காவிரி மேலாண்மை வாரியம்  உடனடியாக அமைக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 12 April 2018 4:52 PM IST (Updated: 12 April 2018 4:52 PM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி பிரதமரிடம் முதல்வர் மனு அளித்துள்ளார். அனைத்து அதிகாரம் கொண்ட ஒழுங்காற்று குழுவை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளார். #CauveryProtest #CauveryIssue #CauveryManagementBoard

சென்னை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சிக்காக பிரதமர் மோடி வருகை தந்தார். அப்போது ராணுவ தளவாட கண்காட்சியை அவர் முறைப்படி தொடங்கி வைத்தார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்கள் பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராணுவ தளவாட கண்காட்சிக்குப் பிறகு, அடையாறு கேன்சர் மருத்துவனைக்கு பிரதமர் மோடி சென்றார். கேன்சர் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர், டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

மோடி, டெல்லி புறப்படுவதற்கு முன்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண் வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பி உள்ளனர் என்றும் அதிகாரமிக்க காவிரி வாரியம், ஒழுங்காற்று குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த மனுவில் கூறியுள்ளார்.

அடுத்த பருவகால பாசனம் வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. எனவே வாரியத்தை அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்ட மனுவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story