தமிழ்நாட்டுக்கு ஊக்கத்தொகை அளிக்க நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தல் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு


தமிழ்நாட்டுக்கு ஊக்கத்தொகை அளிக்க நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தல் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
x
தினத்தந்தி 13 April 2018 5:15 AM IST (Updated: 13 April 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.

சென்னை,

சென்னை திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் இருந்து சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மைய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் சென்னை ஐ.ஐ.டி.க்கு வந்தார். அங்கு இருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி காரில் வந்தார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மையத்துக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடியை அதன் தலைவர் டாக்டர் சாந்தா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

விழாவில் பிரதமர் நரேந்திரமோடி, அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத்தின் வைர விழா கட்டிடம், துயர் நிவாரண மையம், செவிலியர் குடியிருப்பு மற்றும் சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார். பிரதமர் நரேந்திரமோடிக்கு புற்றுநோய் மையம் சார்பில் திருக்குறள் புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:-

ஏப்ரல் 14-ந்தேதி (நாளை) விளம்பி தமிழ் புத்தாண்டு தொடங்க உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களுக்கு எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 மாநில புற்றுநோய் மையங்களையும், 50 மூன்றாம் நிலை புற்றுநோய் மருத்துவ மையங்களையும் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கான திட்ட அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாநில புற்றுநோய் மையங்கள் அமைப்பதற்கு ரூ.120 கோடியும், மூன்றாம் நிலை புற்றுநோய் மையங்களை அமைக்க ரூ.45 கோடியும் ஒதுக்கப்படும்.

புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கவும், கட்டுப் படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் அரசு சாரா நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் என அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். சிறிய குடிசையில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது 500 படுக்கை வசதிகள் உள்ளன. இவற்றில் 30 சதவீதம் படுக்கைகளில் முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப் படுகிறது.

கடந்த சில நாட்களாக ஒரு முக்கிய பிரச்சினை எழுப்பப்பட்டு வருகிறது. 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் குறிப்பிட்ட மாநிலங்கள் அல்லது பிராந்தியத்துக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

மக்கள்தொகை பெருக் கத்தைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது தொடர்பாக நிதி ஆணையத்துக்கு மத்திய அரசு உரிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இதன்மூலம் மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்கள் நிச்சயமாக பயனடையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, புற்றுநோய் அறிகுறிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவியளிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு 10 மருத்துவக்கல்லூரிகளில் ஏற்கனவே உள்ள பழைய கோபால்ட் கதிர்வீச்சு மருத்துவக் கருவிகளுக்கு பதிலாக மொத்தம் 199 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கருவிகளை அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு, அடையாறு புற்றுநோய் மையத்திற்கான உதவிகளை தொடர்ந்து அளித்து அதன் புரவலராக தொடர்ந்து செயல்படும் என்று கூறினார்.

முன்னதாக டாக்டர் சாந்தா பேசும்போது, ‘சேவை நோக்கத்துடன் செயல்படும் எங்களை போன்ற மையங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும். இந்த புற்றுநோய் மையத்தை விரிவுபடுத்த எங்களுக்கு நிலம் தேவைப்படுகிறது. அதனை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்’ என்றார். 

Next Story