மக்களையும், மண்ணையும் காப்பதே நமது முதன்மை லட்சியம் மோடி பேச்சு
நமது மக்களையும், நமது மண்ணையும் காப்பதே நமது முதன்மை லட்சியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சென்னை,
சென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
நமது இந்தியா வேறு எந்த ஒரு பிரதேசத்தையும் விரும்பியது கிடையாது. இதைத்தான் பல ஆயிரம் ஆண்டுகளுடைய நமது நாட்டின் வரலாறு மெய்ப்பிக்கிறது.
போர்களின் மூலமாக பிற நாடுகளை வெல்வதைவிட அந்த நாட்டு மக்களின் இதயங்களை வெல்வதுதான் முக்கியம் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். வேத காலத்தில் இருந்தே உலக சகோதரத்துவம் மற்றும் அமைதியை மற்ற நாடுகளுக்கும் பரவச்செய்த தேசம் நமது இந்தியா.
நமது மண்ணில்தான் புத்த மதம் தோன்றி அது உலகம் முழுவதும் பரவியது. அசோகர் காலத்திலும், அதற்கு முன்பும் மனிதத்துவத்துக்கான உயர்ந்த நெறிகளை காப்பதே பிரதானம் என எண்ணிச் செயல்பட்டனர். கடந்த நூற்றாண்டில் உலகப் போர்களின் போது, இந்தியாவைச் சேர்ந்த 1 லட்சத்து 30 ஆயிரம் வீரர்கள் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தனர். போர்களில் வெற்றி கண்டபோதும், எந்த பிரதேசத்தையும் நாம் உரிமை கொண்டாடவில்லை. நமது வீரர்கள் அமைதியையும், மனித மாண்புகளையும் மட்டுமே மீட்டெடுத்தனர்.
சுதந்திர இந்தியாவில், உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் சார்பில், அமைதி தூதுவர்களாக நமது வீரர்கள் அனுப்பப்பட்டனர். அங்குள்ள மக்களின் நலன்களைப் பேணுவதே, அவர்களது குறிக்கோளாக இருந்தது. இதைத்தான், இந்தியாவின் மிகச்சிறந்த சிந்தனையாளரான கவுடில்யர் தனது அர்த்தசாஸ்திரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஒரு அரசன் அல்லது அரசாள்பவர் தனது மக்களை காக்கவேண்டும் என்றும், போரைவிட அமைதியே விரும்பத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார். நமது மக்களையும், நமது மண்ணையும் காப்பதே நமது முதன்மை லட்சியமாகும்.
ராணுவ உற்பத்தித் துறையில், தனியாரின் பங்களிப்பு கடந்த 2001-ம் ஆண்டு மே மாதம் வரையில் அனுமதிக்கப்படவில்லை. அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், ராணுவ உற்பத்தித் துறையில் தனியார் பங்களிப்புக்கு, முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டது. இப்போது, இந்தத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டின் அளவை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயர்த்தியுள்ளோம்.
ராணுவ தளவாட உற்பத்தி ஆலைகள் மட்டுமே, தயாரித்து வந்த பொருட்களுக்கு, இப்போது தடைவிதித்துள்ளோம். இதற்குப் பதிலாக, நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறையினர் இந்த தயாரிப்புகளை அளிக்க ஊக்கப்படுத்தப்படுகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு வரை, பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பதற்கான உரிமம் 215 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளில் மேலும், 144 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு வரை 537 மில்லியன் டாலர்(சுமார் ரூ.3 ஆயிரத்து 490 கோடியே 50 லட்சம்) மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் 1.3 பில்லியன் டாலராக (சுமார் ரூ.8 ஆயிரத்து 450 கோடி) உயர்ந்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடமிருந்து, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.3 ஆயிரத்து 300 கோடி அளவிற்கு கொள்முதல் செய்தனர். இது 2016-17-ம் ஆண்டில் ரூ.4 ஆயிரத்து 250 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதம் அதிகமாகும்.
இது, கடந்த மூன்று ஆண்டில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொள்முதல் செய்வதற்கான தேவை, இன்னும் அதிகளவில் உள்ளது. அதை பூர்த்தி செய்ய, நாம் கடமைப்பட்டுள்ளோம். பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்து பாதுகாப்பு தொழில் வளாகம் அமைக்க நாம் கடைமைப்பட்டுள்ளோம்.
இந்தியாவில், தமிழகம் மற்றும் உத்தரபிரதேசத்தில் பாதுகாப்பு தொழில் வழித்தடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த தொழில் வழித்தடங்கள், ஏற்கனவே உள்ள பாதுகாப்பு உற்பத்தி தேவையை பயன்படுத்திக்கொள்ளும்.
பாதுகாப்பு துறையில் தனியார் முதலீடுகள் குறிப்பாக புதிதாக தொடங்கும் நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்படும்.
பாதுகாப்புக்கான சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான திட்டம் இன்று துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் பாதுகாப்பு துறையில் கண்டுபிடிப்புகளுக்கான முனையம் ஏற்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். இத்துடன் தனியார் நிறுவனங்களிடமிருந்து தேவையான மூலதனம் பெற்று தரப்படும். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், அனைவரும் கனவு காணச் சொல்கிறார். அந்த கனவு சிந்தனைகளாக மாறி செயலாக மாற வேண்டும்.
பாதுகாப்பு உற்பத்தி துறையில் புதிய மற்றும் ஆக்கப்பூர்வ தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது கனவு. 110 போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது பாதுகாப்பு படைகள் நவீனப்படுத்தப்படும். இந்த ராணுவ கண்காட்சி, வல்லுனர்கள், தொழில்துறையினருக்கு ராணுவ தொழில் நிறுவனங்களை மேம்படுத்த உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story