வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை
பெரம்பலூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ந்தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுகாதார தினத்திற்கான கருப்பொருள் உலகளாவிய சுகாதார சேவை ஆகும். தொற்றா நோய்கள் இறப்புக்கான முக்கிய காரணியாக தற்போது திகழ்கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, தொற்றா நோய்த் தடுப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் சிகிச்சை திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் மிகப் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவ நிலையங்களுக்கு வரும் 30 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட அனைவருக்கும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கருப்பைவாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றை கண்டறியும் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
மருத்துவ கருவிகள்
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 3 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்வதற்கான ‘மக்கள்தொகை மற்றும் சமூகம் சார்ந்த தொற்றா நோய்கள் கண்டறிதல்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பெண் சுகாதார தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று இந்த பரிசோதனையை செய்ய உள்ளனர். இதற்காக, மின் ரத்த அழுத்தமானி, குளுக்கோ மீட்டர், நோயாளர் அடையாள அட்டை, பரிந்துரைச் சீட்டு போன்றவைகள் அடங்கிய பரிசோதனைப் பெட்டகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு வழங்கினார்.
மருத்துவ காப்பீடு
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் கட்டணமின்றி உயர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 1.65 லட்சம் பேர் மருத்துவ சேவையை பெற்றுள்ளனர்.
தேசிய நலவாழ்வு குழுமம், இம்முன்னோடி திட்டத்தின் செயல்பாட்டை, சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து மதிப்பீடு செய்துள்ளது. மக்கள் அதிக அளவில் சுகாதார சேவைகள் பெற்றுள்ளனர் என்பது மதிப்பீட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தாய் சேய் நலம், குடும்ப நலம், தொற்று நோய் மற்றும் தொற்றா நோய்களை கண்டறிதல், கண், காது, மூக்கு, தொண்டை நோய்கள், மனநோய் கண்டறிதல் மற்றும் முதியோர் கவனிப்பு உள்ளிட்ட 12 விதமான சுகாதார சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மருத்துவ தொகுப்பு நூல்
தேசிய நலவாழ்வு குழுமம், சென்னை இந்திய தொழில் நுட்பக் கழகத்துடன் இணைந்து மதிப்பீடு செய்து தயாரித்துள்ள இந்த முன்னோடி திட்டத்தின் ஆய்வறிக்கை மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியில் உள்ள சமூக மருத்துவ துறை ஆரம்ப சுகாதார நிலைய அளவில் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக தயாரித்துள்ள மருத்துவ தொகுப்பு நூல் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதனை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story