ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி வழக்கு: தமிழக அரசு 19-ந்தேதிக்குள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு வருகிற 19-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், ‘ஜெயலலிதாவின் உடலை வைஷ்ணவ அய்யங்கார் பிரமாண சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்யவில்லை. அதனால், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து சம்பிரதாயபடி அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வழங்கும்படி மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இதற்கு பாதுகாப்பு வழங்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
ஆதாரம் இல்லை
இந்த மனுவுக்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘அம்ருதா, ஜெயலலிதாவின் வாரிசு என்பதற்கு சட்டப்பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் வாதிட்டார். மேலும், அம்ருதா குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டதா?, அந்த ரத்த மாதிரி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் உள்ளதா?’ என்று கேள்வி எழுப்பினார்.
தள்ளிவைப்பு
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கிற்கு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாமல், தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி மாதமே பதில் மனு தாக்கல் செய்திருக்கவேண்டும். ஆனால், இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பிரகாஷ் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த அரசு வக்கீல், ‘அட்வகேட் ஜெனரல் சுப்ரீம் கோர்ட்டு சென்றுள்ளார். அதனால், இந்த வழக்கை தள்ளிவைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 19-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story