விளம்பி ஆண்டு பிறந்தது தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
“தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்” என்று தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை,
தமிழ் ஆண்டுகளில், ஹேவிளம்பி ஆண்டு முடிந்து விளம்பி ஆண்டு இன்று (சனிக் கிழமை) பிறந்தது.
இதையொட்டி, புத்தாண்டு கொண்டாடும் தமிழர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மூத்தகுடி எனும் பெருமை கொண்ட தமிழ் குடிமக்கள், ஆண்டாண்டு காலமாய் சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்த நிலையில், அந்த மரபினை மாற்றிய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் மக்களின் உளப்பூர்வ விருப்பத்தின்படி சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு திருநாள் என்ற உரிமையை மீட்டெடுத்த பெருமைக்குரியவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும், நலத்திட்டங்களையும் மக்கள் அனைவரும் முறையாக பயன்படுத்தி, தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக்கொள்வதுடன், வலிமையும் வளமும் மிக்க தமிழ்நாட்டை படைத்திட ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும் என்று இப்புத்தாண்டில் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இனிய புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:- இந்த புத்தாண்டு உலக அளவிலே தமிழர்களுக்கு எழுச்சி தரக்கூடிய ஒரு நாளாக தமிழுக்கு வளர்ச்சி தரக்கூடிய ஒரு நாளாக தமிழ் சமுதாயத்திற்கு உயர்வு தரக்கூடிய ஒரு நாளாக அமைய வேண்டும். அடுத்த ஒரு ஆண்டு நிறைவு பெறுவதற்குள்ளாக தமிழர்கள் எந்தெந்த துறைகளில் அடியெடுத்து வைத்திருக்கின்றார்களோ அத்தனை துறைகளிலும் சாதனை படைத்தவர்களாக உருவாகக்கூடிய அளவுக்கு இறைவனுடைய அருள் தமிழ் சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். என் தமிழ் சமுதாயம் உலகை வென்ற சமுதாயமாக மீண்டும் உருவாக வேண்டும் என்று இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் வாழ்த்துகிறேன்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- வசந்தகாலம் தொடங்குவதை தமிழ் மண்ணுக்கு எடுத்துக் கூறும்சித்திரை திருநாளை கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சித்திரை என்பது வசந்தத்துடன் தொடர்புடைய விழா ஆகும். எனவே, காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் எல்லா தீமைகளும் விரைவில் அகலும். உணவு படைக்கும் கடவுளான உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம்.
திருநாவுக்கரசர்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:- மக்கள் வாழ்வில் வறுமை, அறியாமை அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் இறைவனருளால் பெருகிட வேண்டும். தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை எனது சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்
பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:- இதுவரை 50 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட காவிரி தற்போது பா.ஜ.க. ஆட்சியில் விரைவில் தமிழகமெங்கும் பாய்ந்தோடி தமிழர்கள் வாழ்வில் குதூகலத்தைப் பாய்ச்ச உள்ளது. இந்த சித்திரை, தமிழகமெங்கும் இத்தரையில் அனைத்து நலன்களையும், வளங்களையும் கொண்டுவர தமிழகத்தில் தாமரை மலரட்டும், தமிழகம் வளரட்டும் என்று எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:- இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம் தான் சித்திரை முதல் நாள் ஆகும். தமிழ் மண்ணுக்கு புதுப்பொலிவூட்டிட கடமை ஆற்றுவோம். களத்தில் வெற்றியும் காண்போம். விவசாயிகளுக்கு வசந்தம் பிறக்கும், வாழ்வு சிறக்கும் என்ற நம்பிக்கையை சித்திரைத் திருநாள் விதைக்கட்டும்.
தரணி எங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த்:- இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கே என்ற கொள்கையோடு, தமிழகம் மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்கள் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டும், நாம் அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடும், இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற வேறுபாடின்றியும், அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும், எல்லா வளமும், எல்லா நலனும் பெற்று நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று தே.மு.தி.க. சார்பில் எனது மனமார்ந்த விளம்பி வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜி.கே.வாசன்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:- மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலத்திட்டங்களை இடைவிடாது தொடர வேண்டும். அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். அதற்காக நாமெல்லாம் ஒன்றுபடுவோம், செயல்படுவோம், வெற்றிபெறுவோம். அதன் அடிப்படையிலே வளமான தமிழகத்தையும், வலிமையான பாரதத்தையும் உருவாக்க துணை நிற்போம் என்று தெரிவித்து தமிழ் மக்களுக்கு த.மா.கா. சார்பில் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
டி.டி.வி.தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- இந்த தமிழ்ப் புத்தாண்டில் இன்பமும், இனிமையும், வெற்றியும் நம் ஒவ்வொருவரின் இல்லத்திலும் பொங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குகிறேன்.
சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:- இவ்வினிய புத்தாண்டில், எல்லா நலமும், வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ்கவென தமிழகத்திலும், இந்தியத் திருநாட்டிலும் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நல்வாழ்த்துகளை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்.ஆர்.தனபாலன்
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:- வரும் விளம்பி ஆண்டில் தமிழகம் புதிய பரிணாமத்தை தேடி புத்துணர்வோடும், புதிய நம்பிக்கையோடும், புதுப்பொலிவோடும் தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்ற மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிட ஒன்றுபடுவோம். இந்த புத்தாண்டில் உலகிற்கே உணவை கொடுக்கும் விவசாயிகள் வாழ்வில் வளம் பெறட்டும், விலைவாசி குறையட்டும், தொழில்வளம் பெருகட்டும், அனைவருக்கும் இலவச கல்வி கிடைக்கட்டும், தமிழக மக்கள் சுபிட்சமுடன் வாழ வழி பிறக்கவும், எல்லோருக்கும் எல்லா வளமும் பெறவும் ஆண்டவன் அருள் புரியட்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.
ஏ.சி.சண்முகம்
புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம்:- இப்புத்தாண்டின் துவக்கம், காவிரி நதிநீர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாணும் வகையில் சிறப்பாய் அமைய வேண்டும். இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நாளில் உலகம் முழுவதும் வாழும், அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேவநாதன் யாதவ்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ்:- போராட்டங்கள் நீங்கி, பிரிவினை கருத்துகளை நீக்கி ஒற்றுமைகாண வழிவகுக்கும் புத்தாண்டாக விளம்பி வருடம் தீயவை களைந்து, நல்லவைகளை நாட்டிற்கும், வீட்டிற்கும் கொண்டுவரும் ஆண்டாக மலர எல்லாம்வல்ல இறைவனை வேண்டி அனைவர் வாழ்விலும் நலமும், வளமும் பெருக வாழ்த்துகிறேன்.
ஈ.ஆர்.ஈஸ்வரன்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:- பிறக்கும் தமிழ்ப் புத்தாண்டு தமிழகத்திற்கு காவிரியை பெற்று தரட்டும். அழிந்து கொண்டிருக்கின்ற விவசாயத்தை பாதுகாக்கட்டும். முடங்கிக் கிடக்கின்ற தமிழக தொழிற்சாலைகளுக்கு விடிவுகாலம் பிறக்கட்டும். தமிழர்கள் அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வி.ஜி.சந்தோசம்
இதேபோல், சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவர் ஏ.நாராயணன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர் அலி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஆ.மணியரசன், தமிழ் மாநில தேசிய லீக் தலைமை நிலைய செயலாளர் ஜி.சம்சுதீன், அம்பேத்கர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ம.மத்தியாஸ், தியாகராயநகர் வியாபாரிகள் நலசங்க தலைவர் அலிமா சம்சுகனி உள்ளிட்டோரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story