வன்கொடுமை சட்டம் தொடர்பான தீர்ப்பை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் மு.க.ஸ்டாலின் பேட்டி
வன்கொடுமை சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
வன்கொடுமை சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
அம்பேத்கருக்கு மரியாதை
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது முழு உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாளை ஆர்ப்பாட்டம்
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டில் அளித்திருக்கின்ற தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, அதை கண்டிக்கின்ற வகையில் நாளை (திங்கட்கிழமை) வள்ளுவர் கோட்டம் அருகில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவிருக்கிறோம்.
அதேபோல, காவிரி விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாளை மாலை நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
சட்டமன்றத்தில் தீர்மானம்
கேள்வி:- சட்டத்தின் 356-வது பிரிவே தேவையில்லை, மத்திய அரசு அதிகாரத்தின் மூலமாக நாங்களே ஆட்சிகளை கலைப்போம் என்று எச்.ராஜா தெரிவித்து இருக்கிறாரே?
பதில்:- எச்.ராஜா புதிதாக சொல்லும் கருத்தாக இதை கருதவில்லை. தனிப்பட்ட முறையில் அவர் சொல்லும் கருத்தாகவும் கருதவில்லை. இதற்கெல்லாம் முடிவுரை எழுதுவதற்கு இந்த நாளில் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி:- சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு தினம் என்று தமிழக கவர்னர் பேசியிருக்கிறாரே?.
பதில்:- தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக தலைவர் கருணாநிதி அறிவித்து, ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். எனவே, அதுவே தமிழ்ப்புத்தாண்டு என்று நாங்கள் கருதுகிறோம். கவர்னர் என்ன கருதுகிறார் என்பது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் சட்டம்
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது:-
அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர் இயற்றி, நாட்டுக்கு வழங்கிய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை எப்பாடுபட்டேனும் பாதுகாக்க அனைவரும் ஆர்வத்துடன் முன்வர வேண்டும். மதச்சார்பின்மை, சமூகநீதி, சமத்துவம், சமநீதி, மாநிலங்களுக்கான அதிகாரங்கள், நீதித்துறையின் சுதந்திரம், யாரையும் ஒதுக்கிவிடாமல் எல்லோருக்குமான ஜனநாயகம் என்று அம்பேத்கர் மிகுந்த நம்பிக்கையுடன் உறுதியளித்த அரசியல் சட்ட அடிப்படை அம்சங்கள் அனைத்தும் இன்றைக்கு பா.ஜ.க. ஆட்சியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாட்டையே அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே, தமிழகத்திற்கு விரோதமான திட்டங்களை திணித்து, மதவெறி, இனவெறி, மொழிவெறி அரசியல் மூலம் கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் காவிமயமாக்கி, பேதங்களை ஏற்படுத்தி பிளவுபடுத்த முயலும் பா.ஜ.க. அரசிடம் இருந்து நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற அறவழியில் மீண்டும் ஒரு அமைதியான விடுதலைப் போராட்டத்திற்கு தமிழக மக்களும், நாட்டு மக்களும் தயாராக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story