காவிரி பிரச்சினை: சென்னையில் போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்? சீமான் விளக்கம்
காவிரி விவகாரத்துக்காக சென்னையில் நடந்த போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்? என்பது குறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
காவிரி விவகாரத்துக்காக சென்னையில் நடந்த போராட்டத்தின்போது போலீசாரை தாக்கியது யார்? என்பது குறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
வழக்கு
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தோம். அப்போது எதிர்பாராத விதமாக போராட்டக்காரர்களை போலீசார் தாக்கினார்கள்.
அது தவறு. அதே சமயத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் போலீசாரை தாக்கியதும் தவறு. போலீசார் மீது தாக்குதல் நடத்தியபோது, நான் விலக்கிவிட்டேன். இதற்காக என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். என்னை கைது செய்யுங்கள், சிறையில் அடையுங்கள் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். பல்வேறு கட்சிகள், அமைப்புகள் பங்கேற்ற போராட்டத்தில் எங்கள் கட்சி மீது மட்டும் குற்றம் சொல்வதில் நியாயம் இல்லை.
பொய் வழக்கு
நாம் தமிழர் கட்சியினர் தான் தாக்கினார்கள் என்று எப்படி முடிவு எடுத்தீர்கள்? போலீசாருக்கு எதிரான கட்சி என்று கட்டமைப்பது எந்த விதத்தில் சரியானது? அன்றைய தினம் 4 மணிக்கே எங்கள் கட்சி தொண்டர்கள் 10 பேரை போலீசார் கைது செய்துவிட்டார்கள். ஆனால் இரவு 7 மணிக்கு கைது செய்ததாக, பொய்யாக வழக்கு போட்டிருக்கிறார்கள். போலீசார் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யுங்கள்.
அவர் எந்த கட்சி தொண்டர் என்ற விவரத்தை வெளியிடுங்கள். எங்களுடைய கட்சியை சேர்ந்தவராக இருந்தால் நானே ஒப்படைத்துவிடுவேன். நாங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிரானவர்கள் அல்ல. தண்ணீருக்காக எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த போராட்டம் நடத்தியது தவறு இல்லை. குற்றம் செய்யாத எங்கள் கட்சியினரை கைது செய்தது சரியான அணுகுமுறை அல்ல.
வன்முறை கட்சி இல்லை
நாம் தமிழர் கட்சி வன்முறை கட்சி இல்லை. ரவுடி கும்பல், வன்முறையாளர்கள் என்று எங்களை சித்தரிக்கவேண்டாம். எங்கள் கட்சியை சேர்ந்த 46 பேரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். எனவே தேவை இல்லாமல் எங்கள் கட்சியினரை கைது செய்யவேண்டாம், மிரட்டவேண்டாம்.
அதற்கு பயப்படுபவர்களும் நாங்கள் அல்ல. என் மீது மற்றும் எங்கள் கட்சியினர் மீது போடப்பட்ட வழக்குகளை சட்டரீதியாக அணுகுவோம். போலீசார் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து ரஜினிகாந்த் வெளியிட்ட கருத்துக்கு பின்னால் அரசியல் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story