சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்களை 3 நாளில் 71 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்


சென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்களை 3 நாளில் 71 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 16 April 2018 4:00 AM IST (Updated: 16 April 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போர்க்கப்பல்களை கடந்த 3 நாட்களில் 71 ஆயிரத்து 410 பேர் பார்வையிட்டனர். இதில் பலர் போர்க்கப்பல்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

சென்னை, ஏப்.16-

சென்னை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போர்க்கப்பல்களை கடந்த 3 நாட்களில் 71 ஆயிரத்து 410 பேர் பார்வையிட்டனர். இதில் பலர் போர்க்கப்பல்களை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

‘கிர்ச்’ போர்க்கப்பல்

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடந்த இந்திய ராணுவ கண்காட்சியையொட்டி, சென்னை துறைமுகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக போர்க்கப்பல்கள் கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதன்படி, கடந்த 13-ந் தேதி ‘சுமித்ரா’, ‘ஷயாத்ரி’, ‘கமோர்டா’, ‘ஐராவத்’ ஆகிய 4 போர்க்கப்பல்களும், 14-ந் தேதி கூடுதலாக ‘குக்ரி’ என்ற போர்க்கப்பலும் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

நிறைவு நாளான நேற்று ‘ஷயாத்ரி’ போர்க்கப்பலுக்கு பதில், ‘கிர்ச்’ என்ற மற்றொரு போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டது. பொதுமக்கள் ஏதாவது ஒரு கப்பலை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

குவிந்த பொதுமக்கள்

இந்த போர்க்கப்பல்களை பார்வையிட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர் போன்ற பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று அதிகாலை 4 மணி முதலே தீவுத்திடலில் வந்து குவிந்தனர்.

கூட்டம் குவிந்ததை கண்ட ஏற்பாட்டாளர்கள், உடனடியாக பொதுமக்களை துறைமுகத்துக்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, காலை 7 மணி முதலே பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, பஸ்களில் துறைமுகத்துக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர். இருப்பினும் மக்கள் கூட்டம் குறையவில்லை.

உணவு பொருட்கள் கொண்டுவரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள், சாலையோரம் விற்ற உணவுப்பொருட்களை வாங்கி சாப்பிட்டனர்.

கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை

நேரம் செல்ல செல்ல, வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், அதில் இருந்து தப்பித்துக் கொள்ள பொதுமக்கள் அருகில் இருந்த விளம்பர பேனர்கள், போஸ்டர்கள், பதாகைகளை தலையில் சுமந்தபடி வரிசையில் நின்றனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். எனினும், கப்பற்படை அதிகாரிகளால் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை. மேலும், காலை 10 மணிக்கு மேல் தீவுத்திடலுக்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டத்தை கண்டு பயந்து, தங்கள் வீடுகளுக்கே திரும்பிவிட்டனர். இது ஒருபுறம் இருக்க சென்னை துறைமுகத்திற்குள் சென்று போர்க்கப்பல்களை பார்வையிட்டவர்கள் உற்சாகத்துடன் சென்றனர்.

71 ஆயிரம் பேர்

போர்க்கப்பலில் பொதுமக்கள் பார்வையிடுவதை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்த திருவனந்தபுரத்தை சேர்ந்த கப்பற்படை அதிகாரி அருண்தாஸ் கூறும்போது, “எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக உள்ளது. கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும். மக்கள் சேவை செய்வதற்காகவே இந்த பணிக்கு வந்ததால், கஷ்டத்தையும் இஷ்டமாக எடுத்துக்கொண்டோம். உண்மையில் சொல்லப்போனால் உடலளவில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் இந்த அளவு பொதுமக்களின் ஆர்வத்தை பார்ப்பது பூரிப்பாகவே உள்ளது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே போர்க்கப்பல்களை கடந்த 3 நாட்களில் 71 ஆயிரத்து 410 பேர் பார்வையிட்டதாகவும், நேற்று மட்டும் ஒரே நாளில் 33 ஆயிரத்து 492 பேர் பார்வையிட்டதாகவும் கடற்படை தெரிவித்து உள்ளது. ஆனால், தீவுத்திடலில் மட்டும் நேற்று 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்து இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Next Story