பேராசிரியை விவகாரம்: உயர்மட்ட விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவு


பேராசிரியை விவகாரம்: உயர்மட்ட விசாரணைக்கு தமிழக ஆளுநர் உத்தரவு
x
தினத்தந்தி 16 April 2018 7:58 PM IST (Updated: 16 April 2018 7:58 PM IST)
t-max-icont-min-icon

பேராசிரியை நிர்மலா தேவி கைதான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். #BanwarilalPurohit

சென்னை,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, உயர் பொறுப்பில் உள்ளவர்களிடம் மாணவிகள் அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், 85 சதவீத மதிப்பெண்களும், பணமும் தருவதாக கூறி நிர்பந்தப்படுத்தினார்.

ஆனால், மாணவிகள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டனர். இந்த நிலையில் நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசும் ஆடியோ வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து பேராசிரியை நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. ஆடியோவில் பேசியது நான் தான் என்றும், தான் பேசியதை மாணவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் பேராசிரியை நிர்மலா தேவி கூறியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்விவகாரத்தில், பேராசிரியை மீதான புகார் குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட குழு ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ளது.

அருப்புக்கோட்டை டிஎஸ்பி தனபாலிடம் இதுபற்றி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை கல்லூரி நிர்வாகமும், மாதர் சங்கமும் கொடுத்துள்ளது. புகார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.எஸ்.பி. தனபால் கூறினார்.

கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதாக விருதுநகர் மாவட்ட ஏ.டி.எஸ்.பி மதி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பிற்பகல் முதல் அவர் வீட்டை வெளியே பூட்டிக்கொண்டு உள்ளே இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். 

இதனை அடுத்து, பூட்டை உடைத்து போலீசார் நிர்மலா தேவியை அதிரடியாக கைது செய்துள்ளனர். மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக உயர் மட்ட விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். மேலும் தமிழக அரசின் தலைமை செயலர் அந்தஸ்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானம் தலைமையில் விசாரணை நடைபெறும் என்றும், குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.

Next Story