சேலத்தில், முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி ஆதி தமிழர் பேரவையினர் 85 பேர் கைது


சேலத்தில், முதல்-அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி ஆதி தமிழர் பேரவையினர் 85 பேர் கைது
x
தினத்தந்தி 17 April 2018 3:30 AM IST (Updated: 17 April 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பை எதிர்த்து, சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை ஆதி தமிழர் பேரவையினர் முற்றுகையிட முயன்றனர்.

சேலம், 

வன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பை எதிர்த்து, சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை ஆதி தமிழர் பேரவையினர் முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

தலித் வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், தலித் பிரிவினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், வன் கொடுமை தடுப்பு சட்டத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வலுவான சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும், இந்த சட்டத்தை பாதுகாக்கும் வகையில் அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணையில் இணைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஆதிதமிழர் பேரவையினர் அறிவித்திருந்தனர்.

இதையொட்டி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் முதல்- அமைச்சர் வீட்டை சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த தெருவுக்கு செல்லும் பகுதிகளில் தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டு வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்ல போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதற்கிடையில், அறிவித்தப்படி நேற்று காலை முதல்- அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவதற்காக ஆதி தமிழர் பேரவையினர் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் ரோடு மேம்பாலம் அருகே உள்ள ஒரு டீக்கடை முன்பு திரண்டனர். இதைப் பார்த்த போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

மேலும் பைபாஸ் ரோட்டில் ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக நின்று கொண்டிருந்த ஆதிதமிழர் பேரவையினரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கிடையில் நிர்வாகி ஒருவர் கையில் பெட்ரோல் பாட்டிலுடன் அங்கு வந்தார்.

இதைப் பார்த்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறித்தனர். இவர் முதல்-அமைச்சர் வீடு முன்பு தீக்குளிக்கும் நோக்கத்தில் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு பகுதியில் ஆதிதமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் தலைமையில் பெண்கள் உள்பட பலர் கோஷமிட்டவாறு முதல்-அமைச்சர் வீட்டை நோக்கி சென்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 85 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் ஆதிதமிழர் பேரவை சார்பில், தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பஸ் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் ஆதிதமிழர் பேரவையினர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், ஆதிதமிழர் பேரவையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, வீட்டை முற்றுகையிட முயன்ற 49 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story