காமன்வெல்த் விளையாட்டு: 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு


காமன்வெல்த் விளையாட்டு: 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 April 2018 5:45 AM IST (Updated: 17 April 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #CommonwealthGames #EdappadiPalaniasamy

சென்னை, 

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் கடந்த 4-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடந்தது.

இதில் பதக்கப்பட்டியலில் இந்தியா 26 தங்கமும், 20 வெள்ளியும், 20 வெண்கலப்பதக்கமும் பெற்று 3-வது இடத்தை பெற்றது. காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.30 லட்சமும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.20 லட்சமும் ரொக்கபரிசாக அளிக்கப்பட்டு வருகிறது.

கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்த சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சமும் தங்கப்பதக்கம் வென்ற இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இடம் பிடித்த தமிழகத்தை சேர்ந்த சரத்கமல், அமல்ராஜ், சத்யன் ஆகியோருக்கு தலா ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற மேலும் 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு மொத்தம் ரூ.2.20 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். அத்துடன் பதக்கம் வென்ற வீரர்-வீராங்கனைகளுக்கு அவர் வாழ்த்து செய்தியும் அனுப்பி உள்ளார்.

டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் பெற்ற தமிழக வீரர் சத்யனுக்கு ரூ.50 லட்சமும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற சரத்கமலுக்கு ரூ.50 லட்சமும், ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தீபிகா பலிக்கலுக்கு ரூ.60 லட்சமும், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பாவுக்கு ரூ.30 லட்சமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சவுரவ் கோஷலுக்கு ரூ.30 லட்சமும் ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Next Story