கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு நிர்மலாதேவியுடன் தொடர்பு மேலும் சிலர் சிக்குகிறார்கள்


கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் அழைப்பு நிர்மலாதேவியுடன்  தொடர்பு மேலும் சிலர் சிக்குகிறார்கள்
x
தினத்தந்தி 17 April 2018 11:07 AM IST (Updated: 17 April 2018 11:07 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைப்பு விடுத்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் விரைவில் அவர்களும் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. #Nirmaladevi

மதுரை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரி மாணவிகள் 4 பேரை அதே கல்லூரியில் கணிதத்துறை உதவி 
பேராசிரியையாக பணிபுரிந்து வந்த நிர்மலாதேவி பாலியலுக்கு அழைத்த விவகாரம் வாட்ஸ்-அப் ஆடியோ மூலம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவரிடம் இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ பதிவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் அதில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கள் வெளி வந்துள்ளதால் மதுரை பல்கலைக்கழகத்தில் இது குறித்து பல்வேறு யூகங்கள் கிளப்பப்பட்டு வருகின்றன.  

நிர்மலா தேவியுடன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. நிர்மலாதேவியுடன் கல்லூரியில் படித்த ஒருவர் தற்போது காமராஜர் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். அவர் மூலம்தான் நிர்மலாதேவிக்கு பல்கலைக்கழக தொடர்புகள் ஏற்பட்டு உள்ளன. 

இதையடுத்து சில அதிகாரிகளையும் தன்பக்கம் ஈர்த்த பேராசிரியை நிர்மலாதேவி அடிக்கடி பல்கலைக்கழகத்திற்கு வந்து உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசி இருக்கிறார். இந்த பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டால்தான்  பேராசிரியை நிர்மலாதேவியுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் சிக்குவார்கள். 

எனவே விசாரணையை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இது காமராஜர் பல்கலைக்கழகத்தின் மீது சுமத்தப்பட்ட களங்கம் என்பதால் அதனை விரைந்து விசாரித்து உரிய நடவடிக்கையை வேந்தரும், துணைவேந்தரும் எடுக்க வேண்டும் என்று பொது மக்களும் கோரிக்கை 
வைத்துள்ளனர்.

இதனிடையே பல்கலைக்கழக வேந்தர் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்  ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானத்தை நியமித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் இன்னும் ஓரிருநாளில் மதுரை வந்து விசாரணையை தொடங்குகிறார்.

மாணவிகளிடம் விபரீத பேச்சு  கைதான பேராசிரியை நிர்மலாதேவியிடம், விருதுநகர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதி, 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். நிர்மலாதேவியிடம் நடத்தப்படும் விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

விசாரணைக்கு நிர்மலாதேவி போதிய ஒத்துழைப்பு தருவதாக ஏ.டி.எஸ்.பி. மதி தகவல் வெளியிட்டு உள்ளது.

கைதான பேராசிரியை நிர்மலாதேவி மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

1. இ.பி.கோ. 370-பாலியல்  குற்றத்துக்கு தூண்டுதல்.
2. இ.பி.கோ. 511-குற்றச் செயலுக்கு முயற்சி.
3. இ.பி.கோ. 67- தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்.

யாருடைய தூண்டுதலின் பேரில் மாணவிகளிடம் இவ்வாறு பேசினீர்கள்-? இதற்கு முன்பு எத்தனை முறை இப்படி பேசி உள்ளீர்கள்? என பல கோணங்களில் போலீசார் கேள்விகளை எழுப்பினர்.  ஆனால் பேராசிரியை நிர்மலாதேவி தான் நல்ல நோக்கத்தில் பேசியதாகவும் தனது கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

Next Story