மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் மீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்


மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் மீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்
x
தினத்தந்தி 18 April 2018 5:01 AM IST (Updated: 18 April 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் மீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மீன்பிடி தடைக்காலம் துவங்கிவிட்டதால், ஏற்கனவே பல்வேறு வகையான துன்பங்களை தொடர்ந்து சந்தித்து, சுருண்டு போயிருக்கும், ஏறக்குறைய 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களும், தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக மிகக்கடுமையாகப் போராடும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இலங்கைக் கடற்படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல், அதனால் ஏற்பட்டுவரும் அளவிடமுடியாத இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தமிழ்நாட்டின் மீன்பிடி தொழில்கள் அத்தனையும் நசுங்கி நலிவடைந்து வருகிறது.

இன்றைய விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், மீன்பிடித் தடைக்காலத்தை மீனவர் குடும்பங்கள் கடந்து செல்வது, வறண்ட பாலைவனத்தைக் கடந்து செல்வதைக் காட்டிலும் மிகக் கடினமானதாக இருக்கிறது. ஆகவே, இப்போது வழங்கப்படும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை அவர்களுக்கு நிச்சயம் போதாது என்பதை நடுநிலையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர். இந்த மீன்பிடி தடைக்காலத்தில் குடும்பம் நடத்துவதற்கே மீனவர்கள் மிகவும் சிரமப்படும் சூழல் ஏற்பட்டு, அடுத்த கல்வியாண்டில் தங்கள் பிள்ளைகளை கல்வி நிலையங்களில் சேர்ப்பதற்குப் போராட வேண்டிய நெருக்கடியான நிலை ஏற்படும்.

ஆகவே, வாழ்நாள் முழுவதும் கடலை மட்டுமே நம்பிப் பிழைப்பை நகர்த்தும் மீனவர் குடும்பங்களைக் காப்பாற்றும் வகையில், தற்போது மீன்பிடி தடைக்காலத்திற்கு வழங்கப்பட்டு வரும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகையை உயர்த்தி ரூ.10 ஆயிரம் என்ற அளவுக்காவது வழங்கி, மீனவ சமுதாயத்திற்கு உதவிட வேண்டும் என்று முதல்–அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story