ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆஜர்


ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆஜர்
x
தினத்தந்தி 18 April 2018 5:22 AM IST (Updated: 18 April 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆஜராகி ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது 2 முறை பார்த்ததாக வாக்குமூலம் அளித்தார்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து எழுந்த சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சென்னை சேப்பாக்கம் கலசமகாலில் செயல்பட்டு வரும் இந்த ஆணையத்தில் போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

அந்தவகையில் ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராமலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்பேரில் கலை மற்றும் பண்பாட்டு துறை கமிஷனராக தற்போது பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் நேற்று ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடந்த விசாரணையில், ராமலிங்கம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல்வேறு தகவல்களை ராமலிங்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை ஆணையத்தில் இருந்து வெளியே வந்த ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், “ஆணையத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, நான் உரிய பதில்களை விளக்கி கூறினேன். குறுக்கு விசாரணைக்காக மீண்டும் ஒரு முறை வரவேண்டும் என்று அறிவுறுத்தினர்” என்றார். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இன்று (புதன் கிழமை) ஆஜராகிறார்.

2 முறை

ராமலிங்கம் அளித்த வாக்குமூலம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

2016-ம் ஆண்டு செப்டம்பர் 22, 27-ந் தேதிகளில் 2 முறை ஜெயலலிதாவை சிகிச்சையின் போது நேரில் பார்த்ததாக ராமலிங்கம் தெரிவித்தார். அதே மாதம் 23-ந் தேதி ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பிரதமர், கவர்னர் அனுப்பிய நலம் விசாரிப்பு கடிதத்துக்கு, ஜெயலலிதா நன்றி தெரிவித்து எழுதப்பட்ட கடிதம் அவர் மூலமாகவே அனுப்பியதாக தெரிவித்தார்.

ஆனால் அன்றைய தினம் ஜெயலலிதாவை ராமலிங்கம் நேரில் பார்க்கவில்லை என்றும், டாக்டர் மூலம் ஜெய லலிதாவிடம் கையெழுத்து பெறப்பட்டு பிரதமர், கவர்னருக்கு பதில் கடிதம் அனுப்பியதாகவும் கூறினார். ஜெய லலிதா சிகிச்சை பெற்றபோது அமைச்சர்கள் யாரும் நேரில் பார்த்ததாக அவர் கூறவில்லை. ஜெயலலிதாவிடம் 15 ஆண்டுகள் பணியாற்றினாலும், அவர் சிகிச்சை பெற்ற போது ஒரு முறை மட்டுமே சசிகலாவை பார்த்ததாக தெரிவித்தார்.

இவ்வாறு விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவிடம் பணியாற்றிய 15 ஆண்டுகளில் சசிகலாவை ஒரு முறை மட்டுமே பார்த்ததாக, ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் தெரிவித்த தகவலால் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

Next Story