குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது கவர்னருக்கு, டாக்டர் ராமதாஸ் கோரிக்கை
இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி கவர்னர் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாலியல் வலை விவகாரத்தில் கவர்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பு முற்றிலும் தேவையற்றது. தமிழகத்தை உலுக்கிய இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளிகள் யார்? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும். இது பல்கலைக்கழகம் சார்ந்த விஷயமல்ல. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 4 மாணவிகளை அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள சிலருக்கு பலியாக்க முயன்ற, மன்னிக்கவே முடியாத குற்றம் சார்ந்த விஷயமாகும்.
இதுபோன்ற குற்றவியல் நிகழ்வுகளில் தலையிட பல்கலைக்கழக துணைவேந்தருக்கோ, வேந்தரான கவர்னருக்கோ எந்த அதிகாரமும் இல்லை. ஒருவேளை பல்கலைக்கழக வளாகத்திலேயே இத்தகைய பாலியல் சுரண்டல் நடந்திருந்தால் கூட, அது தொடர்பாக பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. புலனாய்வு அமைப்புகள் தான் இக்குற்றத்தை விசாரிக்க முடியும்.
அந்த வகையில் பல்கலைக்கழக உயரதிகாரிகள், துணைவேந்தர், வேந்தர் என்ற முறையில் தமிழக கவர்னர் ஆகியோர் தான் பாலியல் சுரண்டல் குற்றச்சாற்றுகளை எதிர்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு அம்சம் துணைவேந்தர் முதல் கவர்னர் வரை அனைவருமே, இந்த அவலச் செயலை நிர்மலா தேவி மட்டுமே செய்ததாகவும், அதில் வேறு யாருக்கும் சம்பந்தமில்லை என்பது போன்றும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இது உண்மை அல்ல. நிர்மலா தேவியை பலிகடாவாக்கி விட்டு, அதிகார உச்சியில் உள்ள பெரிய மனிதர்களைக் காப்பாற்றும் சதி தான் இதுவாகும்.
இவ்விஷயத்தில் தம்மீது தவறு இல்லையெனில் அதை நிரூபிப்பதற்கான முயற்சிகளில் தான் கவர்னர் ஈடுபட வேண்டுமே தவிர, இல்லாத அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. இந்த வழக்கில் பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர் எந்த வகையிலும் தலையிடக்கூடாது. மாறாக இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story