ஜெயலலிதாவை 4 முறை சந்தித்து பேசினேன் உதவியாளர் பூங்குன்றன் வாக்குமூலம்
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை 4 முறை சந்தித்து பேசினேன் என்று உதவியாளர் பூங்குன்றன் வாக்குமூலம் அளித்துள்ளார். Jayalalitha
சென்னை,
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆணையத்தில் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார். ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக கொண்டு சென்ற போது போயஸ் கார்டனில் இருந்தீர்களா?, அங்கு என்ன நடந்தது என்று தெரியுமா?, ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்து பேசினீர்களா?, அவர் உங்களிடம் ஏதாவது தெரிவித்தாரா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை பூங்குன்றனிடம், நீதிபதி கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் 4 முறை சந்தித்து பேசியதாகவும், இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியலை கொண்டு சென்ற போது அந்த பட்டியலை பார்த்து வேட்பாளரை தேர்வு செய்து அதற்கு அனுமதி அளித்து அந்த பட்டியலை வெளியிடும்படி கூறியதாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவருக்கு புத்தகம் ஒன்று வாங்கி வரும்படி ஜெயலலிதா கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதேபோன்று, ஜெயா டிவி.யில் வெளியான ஒரு செய்தியில் திருத்தம் இருப்பதாகவும், அதை சரி செய்யும்படி தன்னிடம் கூறியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். மதியம் 1 மணி வரை சுமார் 2½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.
இதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த பூங்குன்றன், ‘ஆணையத்தில் கூறியதை வெளியில் சொல்வது சரியாக இருக்காது. ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். அரசியல் ரீதியாக பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். ஜெயலலிதாவின் இறப்பு எனக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்துள்ளது.
ஜெயலலிதாவை நான், பெற்ற தாயை போன்று தான் நினைத்தேன். அவரும் என்னை பிள்ளை போன்று நினைத்து கண்டிக்கவும் செய்தார். அன்பும் செலுத்தினார். அவரை இழந்ததால் அனாதையாக தனிமையில் இருப்பதை போன்று உணர்கிறேன். ஜெயலலிதாவை தினமும் வழிபடுகிறேன். அந்த ஆன்மா இருக்கிறது உண்மை என்றால் எனக்கு நல்ல வழி கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.
பூங்குன்றனிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக வந்திருந்த சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பூங்குன்றனிடம் இன்னொரு நாள் குறுக்கு விசாரணை செய்யப்படும். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்தித்து பேசியதாக பூங்குன்றன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, நான் எங்கு இருக்கிறேன் என்று ராமமோகனராவிடம் கேட்டதாகவும், அதற்கு அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியதாகவும், அந்த சமயத்தில் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் அங்கு இருந்ததாகவும், எனது நினைவின்படி ஓ.பன்னீர்செல்வம் அங்கு இருந்தார் என்று அவரது பெயரை குறிப்பிட்டு ராமமோகனராவ் ஆணையத்தில் குறுக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.
அதேபோன்று தங்கமணி, வேலுமணி போன்ற அமைச்சர்கள் ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தார்கள் என்று ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்ததாகவும் ராமமோகனராவ் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
2016-ம் ஆண்டு டிசம்பர் 4 மற்றும் 5-ந் தேதிகளில் ஜெயலலிதாவுக்கு இருதய அடைப்பு ஏற்பட்டபோது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி போன்ற சில அமைச்சர்கள் இருந்ததாகவும் குறுக்கு விசாரணையின் போது கூறி உள்ளார். இதற்கு ஆவணங்கள் உள்ளன. ஆணையத்தின் முடிவு வெளியாகும் போது அனைத்து உண்மையும் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story