சென்னை நகரில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது அதிகாரிகள் தகவல்


சென்னை நகரில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 20 April 2018 4:30 AM IST (Updated: 20 April 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

‘சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது.

சென்னை, 

‘சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால், இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வராது. இதனால் சிக்கராயபுரம் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க வேண்டிய தேவையும் ஏற்படாது’ என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் வரலாறு காணாத வகையில் வறண்டு போனது. இதனால் கடந்த ஆண்டு சென்னை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள பம்பு செட்டுகள், நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள், சென்னை போரூரை அடுத்துள்ள சிக்கராயபுரத்தைச் சுற்றியுள்ள கல்குவாரிகள் மற்றும் போரூர் ஏரி, நெய்வேலி சுரங்கங்களில் இருந்து பெறப்பட்ட நீர் மூலம் நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 948 மில்லியன் கன அடியும், புழல் 1,900, சோழவரம் 72, செம்பரம்பாக்கம் 1,023 உட்பட 4 ஏரிகளிலும் சேர்த்து 3,943 மில்லியன் கன அடி அதாவது 3.9 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4 ஏரிகளிலும் சேர்த்து 970 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது.

கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய முதல் தவணை நீரை ஆந்திர மாநில அரசும் கடந்த மாதம் 26-ந்தேதியுடன் நிறுத்திவிட்டது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது 4 ஏரிகளிலும் போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. இதனால் கோடைக்காலத்தில் போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 443 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 120 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 134 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

சென்னை மாநகரப்பகுதிகளில் கடந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு இருந்ததால் தினசரி 430 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஏரிகளில் போதிய நீர் இருப்பதால் தினசரி 650 மில்லியன் லிட்டர் வீதம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில் 200 மில்லியன் லிட்டரை கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்தும், 70 மில்லியன் லிட்டர் வீராணம் ஏரியில் இருந்து எடுக்கப்படுகிறது. மீதம் உள்ள 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே ஏரிகளில் இருந்து எடுக்கப்படுகிறது.

சொற்ப அளவே தண்ணீர் ஏரிகளில் இருந்து எடுக்கப்படுவதால், தற்போது இருக்கும் தண்ணீர் மூலம் கோடையில் ஏற்படும் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்.

எனவே இந்த ஆண்டு சிக்கராயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் உள்ள 1.5 டி.எம்.சி. தண்ணீரை எடுக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story