தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை யு.ஜி.சி. அங்கீகாரம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அங்கீகாரம் உள்ளது என்று பதிவாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அங்கீகாரம் உள்ளது என்று பதிவாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.எம்.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக்கல்வி முறையில் படிப்புகளை வழங்கி வருகின்றன. பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக்கல்வி முறையில் படிப்புகளை வழங்க வேண்டுமெனில், தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின்(என்.ஏ.ஏ.சி.) தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்துள்ளது.
திறந்தநிலை பல்கலைக்கழங்கள் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் தரமதிப்பீட்டினை பெறுவதற்கான விதிமுறைகளை உருவாக்கும் செயல்பாடுகள் தற்போது தான் தொடங்கி உள்ளன.
எனவே தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் தரமதிப்பீட்டினை பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக்கல்வி முறையில் படிப்புகளை வழங்க வேண்டும் என்ற யு.ஜி.சி.யின் அறிவிப்பு தற்போதைய நிலையில் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பொருந்தாது. குறிப்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு பொருந்தாது.
ஏனெனில் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் தரமதிப்பீட்டினை பெறாமல் 2020-ம் ஆண்டு வரை தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்வி முறையில் படிப்புகளை வழங்குவதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன்படி, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைநிலை மற்றும் திறந்தநிலை கல்வி முறையில் வழங்கும் சான்றிதழ், பட்டயம், பட்டம், முதுநிலை பட்டம் ஆகிய படிப்புகள் பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற்றவை ஆகும்.
மேலும் நேரடி கல்வி முறையில் முழுநேரம் மற்றும் பகுதிநேர முறையில் ஆய்வியல் நிறைஞர்(எம்.பில்), முனைவர் (பி.எச்.டி.) ஆகிய ஆய்வு படிப்புகளை வழங்குவதற்கும் பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story