மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை


மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
x
தினத்தந்தி 20 April 2018 4:18 PM IST (Updated: 21 April 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். #Nirmaladevi


மதுரை, 

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்  நிர்மலாதேவியை 10 நாட்கள் ஒப்படைக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் அந்த கல்லூரியில் படித்த 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி நிர்மலா தேவியை கைது செய்தனர். சில மணி நேர விசாரணைக்கு பிறகு மதுரை மத்திய சிறையில் நிர்மலாதேவி அடைக்கப்பட்டார்.

இதனிடையே நிர்மலா தேவி விவகாரம்  சி.பி. சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. 2 விசாரணை அமைப்புகளும் தனித்தனியாக விசாரணையை தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் நிர்மலா தேவியிடம்  விசாரணை நடத்த போலீஸ் காவலில் 7 நாட்கள் அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார்  கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை இன்று சாத்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு கீதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பேராசிரியை நிர்மலாதேவி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

சாத்தூர் நீதிமன்றத்துக்கு நிர்மலாதேவியை போலீஸ் அழைத்து வந்தபோது பெண்கள், வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர். 5 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில் விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
 
மதுரை விசாலாட்சிபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீஸ் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளது.

Next Story