1 முதல் 5-ம் வகுப்பு வரை என்ன பாடங்கள் நடத்தப்படுகின்றன? சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி


1 முதல் 5-ம் வகுப்பு வரை என்ன பாடங்கள் நடத்தப்படுகின்றன? சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 21 April 2018 3:30 AM IST (Updated: 21 April 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்கள், பாடத்திட்டங்கள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும் பாடங்கள், பாடத்திட்டங்கள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் எம்.புருஷோத்தமன் தாக்கல் செய்த வழக்கில், ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்ட விதிகளை மீறி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்படுகின்றன. 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 8 பாடங்களைப் கற்பிக்கின்றனர். தனியார் நிறுவனங்களிடம் இருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்படுவதால், குழந்தைகள் தங்களது எடையை விட கூடுதல் சுமையாக புத்தகங்களை சுமந்து செல்கின்றனர்’ என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கிற்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ‘கல்வி என்பது எந்தவொரு குழந்தைக்கும் மன அழுத்தத்தை தரக்கூடாது என்ற நோக்கத்துடன் பாடப் புத்தகங்களை வடிவமைத்து வழங்கி வருகிறோம். ஒரு குழந்தைக்கு எவ்வளவு நேரம் கல்வி கற்பிக்க வேண்டும்? எவ்வளவு நேரம் அந்த குழந்தைகளே படிக்கவேண்டும்? என்பதை வரையறுத்துத்தான் பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

அதன்படி 2-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கண்டிப்பாக கொடுக்கக்கூடாது. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை வாரத்துக்கு 2 மணி நேரமும், 8-ம் வகுப்பு வரை தினமும் ஒரு மணி நேரமும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தினமும் 2 மணி நேரமும் வீட்டுப்பாடம் அளிக்கப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த வழக்கில் எதிர்மனுதாரராக உள்ள தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் சங்கம், தங்களது பள்ளிக்கூடங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை என்ன பாடங்கள் நடத்தப்படுகின்றன?, அந்த பாடத்திட்டத்தின் விவரங்கள் ஆகியவற்றை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்” என நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.மேலும், “சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு கல்வியாண்டு ஏப்ரல் மாதமே தொடங்கிவிடுகிறது என்று கூறப்பட்டது. அவ்வாறு ஏப்ரல் மாதமே கல்வியாண்டு தொடங்கவேண்டும் என்று சி.பி. எஸ்.இ. நிர்வாகம் அனுப்பிய சுற்றறிக்கையையும் தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story