பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
பெண் டாக்டர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சலுகை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
மலைக்கிராமங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் தொடர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும், மகப்பேறு விடுப்பு, ஈட்டிய விடுப்பு எடுத்திருந்தால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து டாக்டர் அருணா உள்பட 6 அரசு பெண் டாக்டர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதே கோரிக்கை தொடர்பாக வேறு சிலர் தொடர்ந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘மகப்பேறு விடுப்பு காலத்தை பணிக்காலமாக கருதி, பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.
அருணா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்யநாதன், ‘மகப்பேறு விடுப்பு எடுக்க பெண் டாக்டர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், கூடுதல் மதிப்பெண் கேட்க முடியாது. நீதிபதிகள் இருவிதமான உத்தரவுகள் பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்று உத்தரவிட்டார்.
இதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் விசாரித்து, ‘பெண் ஊழியர்களையும், அவர்களின் குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. எனவே அந்த விடுப்பு காலத்தையும் பணிக்காலமாக கருத்தில் கொண்டு, மருத்துவ மேற்படிப்பிற்கான சலுகை மதிப்பெண்களை அரசு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story