சென்னையில் லட்சாதிபதி கொலை நண்பர்கள் 2 பேர் கைது


சென்னையில் லட்சாதிபதி கொலை நண்பர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 April 2018 3:00 AM IST (Updated: 23 April 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் லட்சாதிபதி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, 

சென்னையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் லட்சாதிபதி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை ராயப்பேட்டை முத்து தெருவைச் சேர்ந்தவர் அரி கிருஷ்ணன் (வயது 46). லட்சாதிபதியான இவர் சொந்தமாக வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இதில் அவருக்கு நல்ல வருமானம் வந்தது. வாடகை பணத்தை வசூலித்து இவர் தினமும் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவார்.

நேற்று முன்தினம் மாலையில் சென்னை அண்ணா சாலை அருகே உள்ள ஒயிட்ஸ் ரோட்டில் இருக்கும் மதுக்கடை பாரில் தனது நண்பர்கள் கார்த்திக் (30), அசோக் (24) ஆகியோருடன் சென்று மது அருந்தினார்.


போதை அதிகமாதும் அரி கிருஷ்ணன் தனது நண்பர்கள் கார்த்திக், அசோக் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டார். இந்த தகராறில் கார்த்திக், அசோக் ஆகிய இருவரும் சேர்ந்து அரி கிருஷ்ணனை கீழே தள்ளியதாக தெரிகிறது. கீழே விழுந்த அரி கிருஷ்ணனுக்கு பின்பக்க தலையில் பலமாக அடிபட்டது.

அதில் அவர் மயக்கமடைந்தார். அரி கிருஷ்ணன் மயக்கமடைந்ததை பார்த்ததும் கார்த்திக், அசோக் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அரி கிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப்பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்து மருத்துவ மனையை விட்டு நைசாக வெளியே வந்துள்ளார். வெளியே வந்தவர் மீண்டும் மயக்கமடைந்து, அரசு பொது மருத்துவமனையின் எதிரே உள்ள பிளாட்பாரத்தில் சுருண்டு விழுந்துவிட்டார்.

மருத்துவமனை ஊழியர்கள் அவரை தேடிப்பார்த்தனர். பிளாட்பாரத்தில் கீழே கிடந்த அவரை மருத்துவமனை ஊழியர்கள் கண்டுபிடித்து தூக்கினார்கள். ஆனால் அரி கிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனது தெரியவந்தது.

அரி கிருஷ்ணனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கியபிரகாசம் மேற்பார்வையில் அண்ணாசாலை இன்ஸ்பெக்டர் சிவகுமார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

தப்பி ஓடிய கார்த்திக், அசோக் ஆகிய இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். தள்ளிவிட்டதில் கீழே விழுந்து காயமடைந்து அரி கிருஷ்ணன் இறந்ததால், இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். கைதான கார்த்திக், அசோக் ஆகிய இருவரும் ராயப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story