ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி


ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
x
தினத்தந்தி 22 April 2018 8:15 PM GMT (Updated: 22 April 2018 7:49 PM GMT)

ஏ.சி. எந்திரம் வெடித்ததில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி சாந்தி நகர் முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஆல்பர்ட் (வயது 52). மின்வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அஞ்சலாமேரி (47). இவர் பெரிய மோட்டூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ஸ்டேனி பிரின்ஸ், ஸ்டாலின் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஸ்டேனி பிரின்ஸ் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராகவும், ஸ்டாலின் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டராகவும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, அஞ்சலாமேரி மற்றும் ஆல்பர்ட் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் படுக்கை அறையில் ஏ.சி. எந்திரம் இயங்கி கொண்டிருந்தது. நேற்று அதிகாலை ஆல்பர்ட் நடைபயிற்சிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து எழுந்து சென்றார்.

அஞ்சலாமேரி மட்டும் வீட்டில் தனியாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பயங்கர சத்தத்துடன் ஏ.சி. எந்திரம் வெடித்து சிதறியது. இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அஞ்சலாமேரி மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே வீட்டிற்கு வந்த ஆல்பர்ட், படுக்கை அறையில் மனைவி இறந்து கிடந்ததையும், ஏ.சி. எந்திரம் மற்றும் வீட்டில் இருந்த மின்சார வயர்கள், சுவிட்ச் போர்டுகள், துணிமணிகள் உள்ளிட்டவை எரிந்து கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மனைவியின் உடலை பார்த்து கதறி அழுத அவர், இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அஞ்சலாமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மின்கசிவு காரணமாக ஏ.சி. எந்திரம் வெடித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story