காங்கிரஸ் கட்சி எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் பேட்டி
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான கட்சிகள் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான கட்சிகள் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர அனுமதிகோரி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க் கட்சிகள் நோட்டீஸ் அளித்தது தொடர்பாக மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பதவியில் இருக்கக்கூடிய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவருவது நாட்டிலேயே இதுதான் முதல் முறை. இந்த தீர்மானம் குப்பை தொட்டிக்குத்தான் செல்லும் என்று தெரிந்தும் காங்கிரஸ் முயற்சி செய்கிறது. அதே சமயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் நம்பகத்தன்மை பாதிக்கப்படக்கூடாது. இந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும்.
காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்துக்கு எதிரான கருத்து வைத்திருக்கும் கட்சி இல்லை. ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த பிரச்சினை அரசியல் ஆக்கப்படுகிறது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். அதே சமயத்தில் இந்த பதவி நீக்க தீர்மானம் மூலம் நீதிமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையிலோ, களங்கத்தை ஏற்படுத்தவோ முயற்சிக்கக்கூடாது.
இவ்வாறு மோகன் பரா சரன் கூறினார்.
பேட்டியின்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் குஷ்பு உடன் இருந்தார்.
அப்போது அவர் கூறும்போது, ‘சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி இந்தியாவின் உச்சபட்ச மரியாதைக்கு உரிய நபர். அந்த மரியாதையை நிச்சயம் அவருக்கு தருகிறோம். மரியாதைக்குறைவாக அவரிடம் பேசியது இல்லை. எங்களுக்கு வெளிப்படைத்தன்மை வேண்டும். அதை செய்துதாருங்கள் என்று தான் வேண்டுகோளாக விடுக்கிறோம்’ என்று தெரிவித்தார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு குஷ்பு அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தில் தி.மு.க. உள்பட உங்கள் கூட்டணி கட்சிகள் கூட இன்னும் கையெழுத்திடவில்லையே?
பதில்:- தீர்மானத்தில் உடனே கையெழுத்து போடவேண்டிய அவசியம் இல்லை. மன்மோகன் சிங், ப.சிதம்பரம் போன்றவர்கள் எல்லாம் ஏன் இன்னமும் கையெழுத்துபோடவில்லை என்று பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி அருண் ஜெட்லி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் கேள்வி எழுப்புவார்கள். வழக்கு நிலுவையில் உள்ளதால் இதன் சட்டநுட்பங்கள் நமக்கு தெரியாது. அதே வேளை மற்றவர்கள் ஏன் கையெழுத்திடவில்லை என்பதற்கு நான் பதில் அளிக்கவும் முடியாது. அதற்கு டெல்லியில் உள்ள கட்சி தலைமை தான் பதில் சொல்லவேண்டும்.
கேள்வி:- நடிகர் எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்துள்ளாரே?
பதில்:- எஸ்.வி.சேகர் இப்படி கூறுவாரா? என்று நான் எதிர்பார்க்கவில்லை. பா.ஜ.க.வில் தவறாக பேசுபவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்தால் இப்படி பேசமாட்டார்கள்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Related Tags :
Next Story