வடலூரில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஊடுருவலா? விடிய விடிய போலீசார் வாகன சோதனை


வடலூரில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஊடுருவலா? விடிய விடிய போலீசார் வாகன சோதனை
x
தினத்தந்தி 23 April 2018 4:15 AM IST (Updated: 23 April 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

வடலூரில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வந்ததால் போலீசார் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர். #Maoist

வடலூர்,

வடலூரில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் வந்ததால் போலீசார் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்.

திருச்சி ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்ம மனிதன், ஆந்திர மாநிலத்தில் இருந்து 4 மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் தப்பி விட்டதாகவும், அவர்கள் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்தபோது 4 பேரும் கடலூர் மாவட்டம் வடலூருக்கு காரில் வந்தது போல் தெரிகிறது என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டான்.

இதை கேட்டதும் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் அந்த மர்மமனிதன் பயன்படுத்திய செல்போன் எண்ணில் தொடர்புகொள்ள முயன்றனர். அப்போது அந்த செல்போன் எண் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக மர்ம மனிதன் கூறிய தகவல் பற்றி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு, திருச்சி ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தினர்.

வடலூர் 4 முனை சந்திப்பில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகப்படும்படியான வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். ஆனால் இந்த சோதனையில் பயங்கரவாதிகள் யாரும் சிக்கவில்லை.

பின்னர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மந்தாரக்குப்பம் அருகே மேட்டுக்குப்பம் வளைவு அருகில் கடை நடத்தி வரும் மணி மகன் கோபி(வயது 23) என்பவர் நேற்று முன்தினம் இரவு திருச்சி ரெயில் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வடலூர் பகுதியில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்ததும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story