“தமிழர்களின் இன பிரச்சினையை சிலர் திசைதிருப்புகிறார்கள்” கவிஞர் வைரமுத்து பேச்சு
தமிழர்களின் இன பிரச்சினையை திசைதிருப்பும் வேலையை சிலர் செய்கிறார்கள் என்று கவிஞர் வைரமுத்து பேசினார்.
சென்னை,
சென்னை புத்தக சங்கம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் புத்தக கண்காட்சி கடந்த 20-ந்தேதி முதல் நடந்துவருகிறது. நேற்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்ச்சி திராவிடர் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் வைரமுத்து, மனுஷ்யபுத்திரன் பங்கேற்றனர்.
விழாவில் பூம்புகார் பதிப்பக தலைவர் எம்.ஜே.பிரதாப் சிங், பேராசிரியர் வீ.அரசு, எழுத்தாளர் வேலூர் பா.லிங்கம் ஆகியோருக்கு புத்தகர் விருதுகளை கவிஞர் வைரமுத்து வழங்கினார். இதில் எம்.ஜே.பிரதாப் சிங்குக்கு பதிலாக அந்த பதிப்பகத்தின் பொதுமேலாளர் ரெஜினால்ட் ராஜ் விருதை பெற்றுக்கொண்டார். விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:-
உலகத்தில் அதிகமான புத்தகங்கள் அச்சிடும் நாடுகள் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா என்ற வரிசையில் இந்தியா 5-வதாக நிற்கிறது. முதலிடத்தை நோக்கி முன்னேறும்போது தான் இந்தியா அறிவின் வல்லரசாக ஆகும்.
கண்ணுக்குத் தெரியாத கடவுள் தான்தோன்றி எனில் கண்ணுக்குத் தெரிந்த அண்டம் தான்தோன்றியாய் இருக்கக்கூடாதா? என்ற பகுத்தறிவைச் சொன்னது, புதன் கிரகத்திற்கு இரண்டு நிலா என்று சொன்னது, வெட்டுக்கிளியின் ரத்தம் வெள்ளை என்று சொன்னது, நிலாவில் மனிதன் எடை இழப்பான் என்று சொன்னது, மூளையை மட்டும் பயன்படுத்தும் மனிதன் தலை பெரிதாகி உடல் சுருங்கிக் காலப்போக்கில் கரண்டி வடிவம் பெறுவான் என்று சொன்னது புத்தகமே.
‘கவிதைக்கு பொய்யழகு’ என்ற என் வரியை விமர்சிப்பவர்களும் உண்டு. பொய் என்ற சொல்லுக்கு அங்கே கற்பனை என்று பொருள். கற்பனை அப்படி கவிதைக்கு அழகு சேர்க்கிறது என்பதே அதன் பொருள். தமிழர்களின் உரிமையை உணரவைப்பதும், உரிமைக்காகப் போராடும் அறிவை வளர்ப்பதும் புத்தகங்களே. இன்று உரிமைக்காகப் போராடும் தமிழர்களை சிலர் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.
உணவுத்தட்டுப்பாடு நிலவிய ஒரு காலத்தில் தானியங்களைக் கடத்தக் கூடாது என்று சட்டம் நிலவியது. தமிழக எல்லையில் ஒருவன் தினந்தோறும் சைக்கிளில் ஒரு மூட்டையை கேரளாவுக்குக் கொண்டுசென்று கொண்டிருந்தான். சுங்கச்சாவடியில் தடுத்து மூட்டையைப் பிரித்தார்கள். அதில் அரிசி இல்லை, மணல் இருந்தது. விட்டுவிட்டார்கள். அவன் தினந்தோறும் சைக்கிளில் ஒரு மூட்டையைக் கொண்டு சென்றான். ஒவ்வொரு நாளும் சோதித்து விட்டுவிடுவார்கள்.
ஒரு மாதம் கழிந்த பிறகுதான் அவன் தினந்தோறும் ஒரு திருட்டு சைக்கிளைக் கடத்தியிருக்கிறான் என்று கண்டுபிடித்தார்கள். மூட்டையின்மீது கவனத்தை திசைதிருப்பி சைக்கிளை கடத்தியவன் கதைபோல பெரியார், கருணாநிதி, வைரமுத்து, கனிமொழி, பாரதிராஜா மீது கவனத்தைத் திருப்பிவிட்டு தமிழர்களின் இனப்பிரச்சினையைத் திசைதிருப்பும் வேலையைச் சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள். தமிழர்களே பலியாகிவிடாதீர்கள். விழிப்போடு இருங்கள். நம் மண்ணையும் உரிமைகளையும் மீட்டெடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேற்று உலக புத்தக தின விழா அதன் இயக்குனர் கோ.விசயராகவன் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் நூலக இயக்குனர் கே.நித்தியானந்தம் பங்கேற்று பேசினார்.
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் நூலகர்கள் அ.யோகம், ஆர்.பார்வதி, கோ.வெங்கடாசலபதி, க.சிவா, தமிழ்மொழி மற்றும் மொழியியல் புலத்தின் உதவி பேராசிரியர் நா.சுலோசனா, முனைவர் பட்ட ஆய்வாளர் த.ராகுல்காந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறுவனத்தின் நூலகர் பி.கவிதா வரவேற்றார். நூலக உதவியாளர் கு.செல்வக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story