இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன்: சசிகலாவின் சகோதரர் திவாகரன்


இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன்: சசிகலாவின் சகோதரர் திவாகரன்
x
தினத்தந்தி 24 April 2018 8:56 PM IST (Updated: 24 April 2018 8:56 PM IST)
t-max-icont-min-icon

இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். #TTvdhinakaran

மன்னார்குடி,

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவின் குடும்பத்திற்கும், அவரது சகோதரர் திவாகரன் குடும்பத்துக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. தற்போது அந்த மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் நேற்று முன்தினம் தனது முகநூல் பக்கத்தில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதாவது, “மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதற்கு டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் கருத்து தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து சில பதிவுகளையும் ஜெய் ஆனந்த் வெளியிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தினகரனின் நெருங்கிய ஆதரவாளர் வெற்றிவேல், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்த பதிவும் அமமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. டிடிவி தினகரன் மற்றும் திவாகரன் இடையேயான மோதல் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்ததை இந்த பதிவுகள் வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறியிருந்தனர். 

இந்த சூழலில், மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியதாவது:- அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது. அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தை தினகரன் துவங்கியதை நாங்கள் ஏற்கவில்லை. இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன். தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ளார்.  

கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நானும் எனது மகனும் ஈபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். முதல் அமைச்சர் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.  வெற்றிவேல், செந்தில்பாலாஜி கட்சிக்கு இடையில் வந்தவர்கள். அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலில் தனித்து நிற்போம். அதிமுகவின் சுவடே இருக்க கூடாது என தினகரன் நினைக்கிறார்.  திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story