நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். மூத்த வக்கீலான இவர், மேற்கு வங்க மாநிலத்தில் சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கில், அந்த நிறுவனத்தின் சார்பில் ஆஜரானார். இதற்காக ரூ.1 கோடி வக்கீல் கட்டணமாக பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகும்படி நளினி சிதம்பரத்துக்கு கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சம்மன் அனுப்பினார்கள்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி நளினி சிதம்பரம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதித்தார்.
இந்த தடையை நீக்கக்கோரி அமலாக்கத்துறை சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது, ‘இந்த சம்மன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாரதா நிதி நிறுவன வழக்குகளில் ஏராளமான வக்கீல்கள் ஆஜரானபோது, மனுதாரருக்கு மட்டும் சம்மன் அனுப்பியுள்ளது உள்நோக்கமானது. குற்றவியல் விசாரணை நடைமுறைச்சட்டம் பிரிவு 160-படி பெண்களை விசாரணைக்கு அழைக்கக்கூடாது. வீட்டிற்கு சென்றுதான் விசாரிக்க வேண்டும். எனவே இந்த சம்மனை ரத்து செய்யவேண்டும்’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதிகாரம் உள்ளது
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், “முக்கியமான ஆதாரங்களை திரட்டவே நளினி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களிடம் மோசடி செய்யப்பட்ட ஒரு பெரும் தொகை அவருக்கு வக்கீல் கட்டணமாக வழங்கப்பட்டுள்ளது என்பதால் தான் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவியல் விசாரணை முறை நடைமுறைச்சட்டம் செல்லுபடியாகாது. நளினிக்கு அளிக்கப்பட்டுள்ள தொகைக்காக அவரின் சொத்துகளை முடக்கவும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது” என வாதிட்டார்.
தள்ளுபடி
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வயதானவர்கள், படுத்த படுக்கையாக இருப்பவர்கள் மட்டுமே விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விதிவிலக்கு கேட்க முடியும். ஆனால் மூத்த வக்கீல் நளினி சிதம்பரம், சுப்ரீம் கோர்ட்டு மட்டுமல்லாமல், பல்வேறு மாநில ஐகோர்ட்டுகளிலும் ஆஜராகி வருகிறார். இதை அவரே தனது மனுவில் கூறியுள்ளார். எனவே, சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்கிறேன்.
புதிய சம்மன்
ஒரு வழக்கில் உள்ள உண்மையை வெளியே கொண்டுவர சம்மன் அனுப்பி விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. அதனால், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி புதிய சம்மனை நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story