சென்னை டாக்டர் எஸ்.எம். பாலாஜிக்கு உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருது ஜெர்மனியில் மாநாட்டில் வழங்கப்பட்டது


சென்னை டாக்டர் எஸ்.எம். பாலாஜிக்கு உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருது ஜெர்மனியில் மாநாட்டில் வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 25 April 2018 4:15 AM IST (Updated: 25 April 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

சென்னை டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு ஜெர்மனியில் நடந்த மாநாட்டில் உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது.

சென்னை,

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உதடு மற்றும் அன்னப்பிளவிற்கான சர்வதேச அமைப்பு (ஐ.சி.பி.எப்.) கடந்த 30 ஆண்டுகளாக வாய் மற்றும் முகக்குறைபாடு உள்ளவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் அமைப்பாக திகழ்கிறது. இது மருத்துவ விழிப்புணர்வை பரவலாக்குவதுடன், வளர்ச்சியற்ற மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு தன்னார்வ மருத்துவ சேவையளிக்கும் ஒரு லாபநோக்கமற்ற அமைப்பு ஆகும்.

அந்நாடுகளில் உள்ள அறுவை சிகிச்சை மற்றும் அன்னப்பிளவு சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்களுக்கு ஐ.சி.பி.எப். அமைப்பு இலவசமாக பயிற்சி அளித்துவருகிறது. வியட்நாம், கம்போடியா, துனிசியா மற்றும் வளரும் நாடுகளில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு இந்த அமைப்பு நிதி உதவி அளித்து வருகிறது. ஐ.சி.பி.எப். அமைப்பில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சுமார் 60 நாடுகளில் உள்ளனர்.

எஸ்.எம்.பாலாஜிக்கு விருது

பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் இந்த அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். இவர் வாய் மற்றும் முகப்பிளவு சீரமைப்பு துறையில் புரிந்த பல்வேறு மகத்தான மருத்துவம் சார்ந்த பங்களிப்புக்காக அவரை பெருமைப்படுத்தும் வகையில் ஐ.சி.பி.எப். அமைப்பு தனது மிகஉயர்ந்த விருதினை அவரது பெயரில் உருவாக்கியது. டேவிட் பிரிசியஸ் விருதினை யாருக்கு வழங்குவது என்பது உலக புகழ்பெற்ற பிளவு சீரமைப்பு அறுவை சிகிச்சை குழுவினரால் தீர்மானிக்கப்படுகிறது.

அந்தவகையில், ஜெர்மனியில் நடந்த சர்வதேச அன்னப்பிளவு மற்றும் கபால சீரமைப்பு மாநாட்டில் சென்னையை சேர்ந்த பல் மற்றும் முகச்சீரமைப்பு டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருதான பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் விருது வழங்கப்பட்டது. மாநாட்டின் தலைவர் பேராசிரியர் அலெக்சாண்டர் ஹெம்பிரிச், அறங்காவலர் குழு உறுப்பினர் பேராசிரியர் மேரி டொலரோவா ஆகியோர் முன்னிலையில் இந்த விருதினை டாக்டர் எஸ்.எம்.பாலாஜிக்கு ஐ.சி.பி.எப். அமைப்பின் தலைவரான உலக புகழ்பெற்ற முகம் மற்றும் கபால அறுவை சிகிச்சை நிபுணரான அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் கென்னத் சல்யர் வழங்கினார்.

முதல் இந்தியர்

பேராசிரியர் டேவிட் பிரிசியஸ் விருது முதன்முதலாக டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கசூடோ ஹோஷிக்கு பிளவு புனர்வாழ்வு பணிகளுக்காக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு சென்னையை சேர்ந்த டாக்டரான எஸ்.எம்.பாலாஜிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதினை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் தட்டிச்சென்றுள்ளார்.

டாக்டர் எஸ்.எம்.பாலாஜி பிளவு சீரமைப்புக்காக புரோட்டீன்களை வைத்து எலும்பு மற்றும் சதை பகுதிகளை மறுபடியும் உருவாக்கும் முறை பற்றி செய்த ஆய்வுகளுக்காக இந்த விருதினை பெற்றுள்ளார். இந்த சிகிச்சை மூலம் தேவையில்லாமல் இரண்டாவது அறுவை சிகிச்சை தவிர்க்கப்படுகிறது. இந்த மருத்துவ முறை செயற்கை பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் சிக்கல்களையும் தவிர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story