மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாமா? ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு


மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாமா? ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு
x
தினத்தந்தி 25 April 2018 4:30 AM IST (Updated: 25 April 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கலாமா? கூடாதா? என்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது.

சென்னை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க கேட்டு, ஐகோர்ட்டில் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதி டி.ராஜா விசாரித்து வருகிறார். விசாரணையின்போது, மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்குவதில்லை என்றும் காவிரி விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோருக்கு கூட மெரினா கடற்கரையில் அனுமதி வழங்கவில்லை என்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் கூறினார்.

இதையடுத்து, ‘மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த கடைசியாக எப்போது அனுமதி வழங்கப்பட்டது? என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், ‘ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை தவிர்த்து, 2003-ம் ஆண்டுக்குப்பின்னர் மெரினா கடற்கரையில் எந்த ஒரு போராட்டங்களும் நடைபெறவில்லை. கூட்டம் அதிகம் கூடினால், போலீசாரால் கட்டுப்படுத்த முடியாது என்பதால், மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி வழங்குவது இல்லை’ என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி, ‘காவிரியை விட மெரினா முக்கியமா?’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், மத தொடர்புடைய திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் தான் லட்சக்கணக்கான மக்கள் கோவில், தேவாலயங்கள், பள்ளிவாசல் களில் ஒன்று கூடுகின்றனர். கூட்டம் அதிகம் பேர் வருகின்றனர் என்று அந்த திரு விழாக்களே கொண்டாடக் கூடாது என கூறி விட முடியுமா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

பின்னர் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்த தீர்ப்பை இன்று (புதன்கிழமை) பிறப்பிப்பதாக கூறினார். 

Next Story