குறுக்கு வழியில் பணக்காரனாக வங்கி கொள்ளையில் ஈடுபட்டேன் பீகார் கொள்ளையன் வாக்குமூலம்
குறுக்கு வழியில் பணக்காரனாக வங்கி கொள்ளையில் ஈடுபட்டேன் என்று பீகார் கொள்ளையன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தான்.
அடையாறு,
சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று முன்தினம் பட்டபகலில் துப்பாக்கி முனையில் ரூ.6.36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. பீகார் மாநிலத்தை சேர்ந்த மனீஷ்குமார் தன்னந்தனியாக வந்து பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றபோது பொதுமக்கள் மற்றும் போலீசார் மடக்கி பிடித்தனர்.
அப்போது மனீஷ்குமார் தன்னிடம் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் பொதுமக்களை நோக்கி ஒரு முறை சுட்டான். ஆனால் குண்டு யார் மீதும் படவில்லை.
வாக்குமூலம்
இதையடுத்து கொள்ளையன் மனீஷ்குமார் மீது அடையாறு போலீசார் வழக்குப்பதிந்து அவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து 2 செல்போன்கள், 2 சிம் கார்டுகள், ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. மேலும் அவன் வைத்திருந்த 2 துப்பாக்கிகள், ரூ.6.36 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. மனீஷ்குமாரை போலீசார் நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
வங்கி கொள்ளை குறித்து மனீஷ்குமார், போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் வருமாறு:-
நான் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். இன்னும் திருமணமாகவில்லை. எங்கள் மாநிலத்தில் இருந்து பலர் தமிழ்நாட்டுக்கு வந்து வேலை செய்து வசதி படைத்தவர்களாக உள்ளனர். நானும் அவர்களை போல் தமிழ்நாட்டுக்கு வந்து ஏதாவது ஒரு வேலை பார்த்து பணம் சம்பாதிக்க பணக்காரனாக ஆசைப்பட்டேன்.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தேன். கேளம்பாக்கத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அதில் நண்பர்களுடன் தங்கியிருந்தேன். முதலில் டீ கப் தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்தேன். அதில் போதிய வருமானம் இல்லாததால், ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன்.
பின்னர் திருவான்மியூரில் ஐஸ்கிரீமை தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்தேன். ஐஸ்கிரீம் தயாரிக்கும் கம்பெனியிலேயே தங்கி இருந்தேன். இது போன்ற வேலைகள் செய்தால் பணக்காரன் ஆக முடியாது என நினைத்தேன்.
என்னுடைய சொந்த ஊரில் கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு நிறைய பேர் வசதி படைத்தவர்களாக உள்ளனர். இதனால் நானும் குறுக்கு வழியில் கொள்ளையடித்து பணக்காரனாக முடிவு செய்தேன்.
ஐஸ்கிரீம் விற்பனை செய்வதற்காக அடையாறு இந்திரா நகர் பகுதிக்கு சென்றபோது இந்தியன் வங்கியை நோட்டமிட்டேன். மதிய வேளைகளில் அங்கு கூட்டம் குறைவாக இருந்தது. காவலாளிகளும் இல்லை. எனவே அந்த நேரத்தில் வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்தேன். இதற்காக கடந்த வாரம் பீகார் சென்று 2 நாட்டு துப்பாக்கிகளை விலைக்கு வாங்கினேன். துப்பாக்கி சுடுவது பற்றி பயிற்சியும் எடுத்தேன்.
கடந்த 21-ந் தேதி சென்னை வந்தேன். பின்னர் வங்கியில் கொள்ளையடிக்க ஒத்திகை பார்த்தேன். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு இந்திரா நகர் இந்தியன் வங்கிக்கு சென்று மோட்டார் சைக்கிளில் காத்திருந்தேன். வங்கியில் கூட்டம் குறைந்தவுடன் மதியம் 12.45 மணிக்கு வங்கியில் நுழைந்து பணத்தை கொள்ளையடித்தேன். எனது திட்டம் எளிதாக நிறைவேறியது.
ஆனால் தப்பிச்சென்ற போது போக்குவரத்து சிக்னலில் சிக்கிக்கொண்டேன். என்னை விரட்டி வந்த பொதுமக்களை மிரட்டுவதற்காகவே துப்பாக்கியால் சுட்டேன். யாரையும் கொலை செய்யும் எண்ணம் இல்லை.
இவ்வாறு அவன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் மனீஷ்குமார் மட்டுமே ஈடுபட்டதாகவும், வேறு யாருக்கும் தொடர்பு இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story