‘குடும்பத்தை சிதைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்’ டி.டி.வி.தினகரன் அணி மீது திவாகரன் மகன் தாக்கு


‘குடும்பத்தை சிதைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்’ டி.டி.வி.தினகரன் அணி மீது திவாகரன் மகன் தாக்கு
x
தினத்தந்தி 26 April 2018 4:15 AM IST (Updated: 26 April 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தை சிதைத்துக்கொண்டு இருப்பதாக டி.டி.வி.தினகரன் அணி மீது திவாகரன் மகன் ஜெயானந்த் குற்றம் சாட்டி உள்ளார்.

சென்னை, 

சசிகலா குடும்ப மோதல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. சசிகலாவின் உறவினர்கள் திவாகரன்-டி.டி.வி.தினகரன் இடையே நீடித்து வரும் பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திவாகரன், எடப்பாடி பழனிசாமி அணியுடன் சேரப்போவதாக டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்ததே பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டி.டி.வி.தினகரன் தொடங்கியுள்ள கட்சியை ஏற்க முடியாது என்று திவாகரன் அறிவித்தார். பதிலுக்கு டி.டி.வி.தினகரனும் சரமாரியாக கேள்வி எழுப்பி, திவாகரனுக்கு பதில் அளித்தார்.

இந்த நிலையில் திவாகரனின் மகன் ஜெயானந்த் முகநூலில் இந்த மோதல் குறித்து கருத்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சின்னம்மா (சசிகலா) திவாகரனுக்கு முதல் சகோதரர், ஒன்றாக வளர்ந்தவர்கள், அக்காவை திட்டாத தம்பி உலகில் கிடையாது. இதை கூடப் பெரிதாக்க வெற்றிவேல் ஆர்வம் காட்டுவது ஏனோ?. சசிகலா மீது உள்ள களங்கத்தை டி.டி.வி.தினகரன் தான் துடைத்தார் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சசிகலா மத்திய அரசாங்கத்திற்கு பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சசிகலாவின் பக்கபலம் மற்றும் ஜெயலலிதா, சசிகலாவை எடுக்க சொன்ன வீடியோ இவை மூன்றும் தான் டி.டி.வி.தினகரனை கரை சேர்த்தன. ஆர்.கே.நகரில் வென்ற துணிச்சலில் வெற்றிவேல் பேசுவது எதிர்காலத்தில் பாதகமாகிவிடும்.

எனது தந்தைக்கு பதவி ஆசை இருந்திருந்தால் டி.டி.வி.தினகரனுடன் ஒரு வருடத்திற்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவணைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை திட்டமிட்டு புறக்கணித்தால் அவர் எப்படி பொறுத்திருப்பார்? அவர் என்ன சிறுவனா?. நான் கேட்கும் கேள்வி, அ.தி.மு.க. தொண்டனாய் செயல்பட்ட ஒரு சிலருக்கு சசிகலா குடும்பம் என்ற பட்டத்தை தலையில் கட்டி, குடும்ப அரசியல் என டாடா காட்ட வெற்றிவேல் துடிக்க காரணம் என்ன?. எங்களை திரைமறைவில் அசிங்கப்படுத்தினால் நாங்கள் தவறான வழி எடுப்போம் என கனவு கண்டு, சசிகலா குடும்பத்தை சிதைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களை சொல்லி ஒன்றும் ஆகாது, தூண்டுபவர்களை சொல்ல வேண்டும்.

இவ்வாறு முகநூலில் அவர் தெரிவித்துள்ளார்.

திவாகரன்-டி.டி.வி.தினகரன் மோதல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, ‘இது நாட்டிற்கு தேவையில்லாத பிரச்சினை, அவர்கள் இன்றைக்கு சண்டையிடுவார்கள், நாளை சேர்ந்து விடுவார்கள். எனவே அவர்களை பற்றி பேச தேவையில்லை’ என்று தெரிவித்தார். 

Next Story