அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
வேந்தர் என்ற முறையில் அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஏற்ப நான் செயல்பட தேவையில்லை என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் உறுதிபடக் கூறினார்.
சென்னை,
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை ராஜ்பவனில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- நீங்கள் கவர்னராகவும், பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறீர்கள்? இரண்டு பதவிகளின் அதிகாரமும் என்ன?
பதில்:- தமிழ்நாட்டின் 20 பல்கலைக்கழகங்களின் வேந்தர் கவர்னர்தான். வேந்தர் என்ற முறையில் அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஏற்ப கவர்னர் செயல்படத் தேவையில்லை. ஆனால் கவர்னர் பதவியை பொறுத்தவரை, அமைச்சரவையின் ஆலோசனைப்படி அவர் நடக்க வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின்படி கட்டாயமாகும். இது மக்களில் பலருக்கு தெரிந்திருக்காது.
மாநில அரசு என்பது, வேந்தரின் அதிகாரத்துக்கு வேறுபட்டது. வேந்தருக்கான ஆலோசனையை அமைச்சரவை வழங்க முடியாது. பல்கலைக்கழக பணிகளில் அரசு தலையிட முடியாது. வேந்தர் என்ற முறையில் யாருடைய தலையீடும் இல்லாமல் கவர்னர் சுதந்திரமாக செயல்பட முடியும்.
கேள்வி:- 3 பல்கலைக்கழகங்களில் நடந்த துணை வேந்தர் பணி நியமனத்தில் சில விமர்சனங்கள் உள்ளன. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக தமிழகத்தில் நியமிக்கப்படுவது ஒரு குறைபாடாக கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில்:- 5 துணை வேந்தர்கள் நியமனத்தில் இரண்டு துணை வேந்தர்கள் மட்டும் வெளி மாநிலத்தவராகும். இந்த நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறைகளை நான் உடைக்கவில்லை.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நியமனம் தொடர்பான விளம்பரம் இந்தியா முழுவதும் அளிக்கப்பட்டது. ஏனென்றால், அந்தப் பதவிக்கு தகுதியான மற்றும் பொருத்தமானவர் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும், அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தவரும் சரிசமமாக கருதப்பட வேண்டும். எனவே இந்தப் பதவி நியமனத்தில் மாநில வேறுபாடு காட்ட முடியாது.
எனக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 பெயர்களில், ஒருவர் கணிதம் படித்தவர். மற்றொருவர், பயோ கெமிஸ்டிரி பட்டம் பெற்றவர். ஆனால் துணை வேந்தர் பதவி என்பது பொறியியல் பல்கலைக்கழகத்துக்கு ஆனதாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் வருகின்றன. எனவே பொறியியல் படித்தவர்தான் அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்ற பொருத்தமானவராக இருக்க முடியும்.
அதன்படி, 3-வது நபரான சுரப்பா, இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்வி நிறுவனமான பஞ்சாப் மாநிலம் ரோப்பர் ஐ.ஐ.டி.யின் இயக்குனராக பணியாற்றியவர். ஐ.ஐ.எஸ்.சி.யில் பல ஆண்டுகள் பேராசிரியராக அனுபவம் கொண்டவரான சுரப்பா தேர்வு செய்யப்பட்டார். அந்த 3 பெயர்களையும் நான் நிராகரித்து இருந்தால் துணை வேந்தர் பெயர் பரிந்துரைக்க மேலும் 6 மாதங்கள் ஆகியிருக்கும். மாணவர்களின் நலனுக்காகத்தான் இதைச் செய்தேன்.
Related Tags :
Next Story