ஜெயலலிதாவின் ரத்த மாதிரி உள்ளதா? இல்லையா? இன்று பதில் அளிக்க ஆஸ்பத்திரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
ஜெயலலிதாவின் உயிரி ரத்த மாதிரி அப்பல்லோ ஆஸ்பத்திரி வசம் உள்ளதா? என்பது குறித்து இன்று பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் எனக்கூறி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கு மனுவில், ‘ஜெயலலிதாவின் உடலை வைஷ்ணவ அய்யங்கார் பிரமாண சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்யவில்லை. அதனால், ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து சம்பிரதாயபடி அடக்கம் செய்ய எனக்கு அனுமதி வழங்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். நான் தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்தவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
நீதிபதி கேள்வி
இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, ‘ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது, அவரது உயிரி ரத்த மாதிரியை ஆஸ்பத்திரி நிர்வாகம் எடுத்து வைத்துள்ளதா?, அதை கொண்டு மரபணு சோதனை செய்ய முடியுமா?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜெயலலிதாவின் உயிரி ரத்த மாதிரி தங்கள் வசம் உள்ளதா? என்பது குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
சோதனை தேவையில்லை
இந்த வழக்கிற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் ஏற்கனவே பதில் மனுவை தாக்கல் செய்துவிட்டனர். அதேபோல, இந்த வழக்கிற்கு தமிழக தலைமை செயலாளர் சார்பில் பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், பதில் மனு தாக்கல் செய்தார்.
ஜெயலலிதாவின் மகள் என்று அம்ருதா எந்த ஒரு ஆதாரங்களையும் தாக்கல் செய்யாததால், மரபணு சோதனை நடத்த தேவையில்லை. பெங்களூரில் அம்ருதாவை ஜெயலலிதா பார்க்கச் சென்றார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றும் அந்த பதில் மனுவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீலிடம், ‘ஜெயலலிதாவின் உயிரி ரத்த மாதிரி ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் உள்ளதா?, இல்லையா? என்பது குறித்து இன்று (வியாழக்கிழமை) பதில் அளிக்க வேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ‘ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க அம்ருதாவிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. எனவே, அவர் இந்த வழக்கை தொடர முடியாது. வேண்டுமென்றால், அவர் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரட்டும்’ என்று வாதிட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை இன்று (வியாழக்கிழமை) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story