பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்
பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, மரணம் அடைந்தார்.
சென்னை,
பிரபல பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 87.
1950-களில் குழந்தை நட்சத்திரங்களுக்காக பாடி புகழ் பெற்றவர், எம்.எஸ்.ராஜேஸ்வரி. ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில், குழந்தை நட்சத்திரமான கமல்ஹாசனுக்காக, “அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாடலை பாடியவர், இவர்தான்.
“ஓ ரசிக்கும் சீமானே,” “மியாவ் மியாவ் பூனைக்குட்டி,” “காந்தி மகான் காந்தி” உள்பட தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழி படங்களில், ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருந்தார்.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகள் வீட்டில் வசித்து வந்த இவர், கடந்த 6 மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார். நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு பொதுமக்களும், திரையுலக பிரமுகர்களும் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இறுதி சடங்குகள் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு குரோம்பேட்டை மயானத்தில் அவருடைய உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
மரணம் அடைந்த பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரிக்கு கற்பகவள்ளி, ஆர்த்தி என்ற 2 மகள்கள். மகன் பெயர், ராஜ் வெங்கடேஷ். இவர்களில், மகள் ஆர்த்தி 2 வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்து விட்டார்.
Related Tags :
Next Story