பழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
பழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு பிறபித்து உள்ளது. சிபிசிஐடி விசாரிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. #IGPonmanickavel
சென்னை,
புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. மிகவும் அரிதான அந்த சிலையை சித்தர் போகர் உருவாக்கினார் என்பது வரலாறு. அந்த சிலை சேதமடைந்துவிட்டதால் அதே போல் புதிதாக ஐம்பொன் சிலை ஒன்று கடந்த 2003-2004 ம் ஆண்டு செய்யப்பட்டது. அந்த சிலையை பிரபல சிற்பி முத்தையா ஸ்தபதி செய்துள்ளார். அந்த சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில், சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது.
அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தீவிர விசாரணைக்கு பிறகு முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை முன்னாள் இணை கமிஷனர் கே.கே.ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் செயல்படும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு விசேஷ கோர்ட்டில் அவர்கள் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பழனி முருகன் கோவிலில் உள்ள விலை மதிப்பில்லாத நவபாஷாண சிலையை சிலர் வெளிநாட்டுக்கு கடத்திச்சென்று விற்க முயல்வதாகவும் தெரியவந்தது. ஐம்பொன் சிலை செய்ததில் நடந்த மோசடி குறித்து கோவில் இணை ஆணையர் மற்றும் மேலாளரிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தீவிர விசாரணை நடத்தினார்.
பழனி முருகன் கோவிலில் கடந்த 2003-ம் ஆண்டு முதல் தற்போது வரை காணிக்கையாக பெறப்பட்ட தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விவரங்கள், பக்தர்கள் வழங்கிய நன்கொடை உள்ளிட்ட விவரங்கள் குறித்து கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் பழனி முருகன் கோவிலுக்கே ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தங்கம் கிடைக்கும்போது, ஏன் திருத்தணி கோவில் நிர்வாகத்திடம் இருந்து சிலை செய்யும் பணிக்காக தங்கம் பெறப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி பொருட்கள் எங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டு தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை வளையத்துக்குள் அப்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவரும், அப்போதைய அறங்காவலர்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது. மேலும் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுக்குள் 2 முறை பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அப்படியிருக்கும்போது 2001-2006-ம் ஆண்டுகளுக்கு இடையே 2 முறை ஏன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது? ஒரே நபர் தொடர்ந்து 2 முறை அறங்காவலர் குழு தலைவராக எப்படி நியமிக்கப்பட்டார் என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
பழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவிலிருந்து, சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. சிலை கடத்தல் வழக்கு இல்லை என்பதாலும், புதிய சிலை செய்வதில் மோசடி தொடர்பான வழக்கு என்பதால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பழனி முருகன் பஞ்சலோக சிலை முறைகேடு வழக்கை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு பிறபித்து உள்ளது. சிபிசிஐடி விசாரிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
பழனி கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கில் 90 நாட்களுக்கு வீட்டில் செல்போன், இணையதளம் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என நிபந்தனையின் பேரில் ஸ்தபதி முத்தையா, கோயிலின் முன்னாள் இணை ஆணையர் ராஜா இருவருக்கும் ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உள்ளது.
Related Tags :
Next Story