இலங்கை, மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


இலங்கை, மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 April 2018 11:00 PM GMT (Updated: 26 April 2018 9:30 PM GMT)

ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் வழியாக பல்வேறு வெளிநாடுகளுக்கு அடிக்கடி வெளிநாட்டு பணம் கடத்தப்பட்டு வருகிறது. இதை அவ்வப்போது சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதைப்போல நேற்றும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டிற்கு செல்லும் விமானங்களில் பெருமளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உஷாரான அதிகாரிகள், வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டனர்.

சவுதி ரியால்

அதன்படி இலங்கைக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது பரகத் அலி (வயது 47) என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 20 ஆயிரம் சவுதி ரியால் மற்றும் ஆயிரம் யூரோ நோட்டுகள் இருந்தன. இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதே விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த குணசேகரன் (39) என்பவரின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதித்தனர். அப்போது அவற்றில் சுமார் ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள, 44 ஆயிரத்து 500 ரியால்கள் இருந்தன. அவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

ஹவாலா பணமா?

இதைப்போல மலேசியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையை சேர்ந்த சதாம் உசேன் (26) என்பவரின் உடைமைகளில் இருந்தும் சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரம் யூரோ பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவ்வாறு 3 பேரிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.16 லட்சம் ஆகும். இதைத்தொடர்ந்து 3 பேரின் பயணத்தையும் ரத்து செய்த அதிகாரிகள், அவர்கள் வைத்திருந்தது ஹவாலா பணமா? இதன் பிண்ணனியில் யார் இருக்கிறார்கள்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story