இன்று மே தினம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


இன்று மே தினம்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x
தினத்தந்தி 30 April 2018 7:17 PM GMT (Updated: 30 April 2018 8:14 PM GMT)

இன்று மே தினத்தையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை, 

மே தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உழைக்கும் மக்களின் சிறப்பினை உலகிற்கு பறைசாற்றும் தினமான மே தின நன்னாளில், உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ‘மே தின’ நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உடல் உழைப்பை மூலதனமாகக்கொண்டு உலகை வாழ வைக்கும் உழைப்பாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுத்த திருநாளாகவும், உடல் உழைப்பின் மேன்மையை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் மே தின திருநாள் கொண்டாடப்படுகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ‘உழைப்புக்கு என்றும் உயர்வு உண்டு. உழைப்பின் உயர்வில்தான் உண்மையான மனநிறைவு கிடைக்கும் என்பதை உணர்ந்து நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி உங்களுக்கே’ என்று உரைத்த அமுதவாக்கை நெஞ்சில் பதித்து அனைவரும் கடினமாக உழைத்தால் வாழ்வில் மேன்மை அடையலாம்.

நாட்டின் வளர்ச்சிக்காவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக சிந்தி உழைத்திடும் தொழிலாளர் பெருமக்கள் அனைவரும் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திடவேண்டும் என்று வாழ்த்தி எனது அருமை தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ‘மே தின’ நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story