குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பலர் பலியான சம்பவம் எதிரொலி: வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம்


குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பலர் பலியான சம்பவம் எதிரொலி: வனத்துறை அதிகாரிகள் இடமாற்றம்
x
தினத்தந்தி 1 May 2018 11:10 PM GMT (Updated: 1 May 2018 11:10 PM GMT)

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி பலர் பலியான சம்பவம் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் வனத்துறை அதிகாரிகள் பலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சென்னை,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டம், போடி மெட்டு, குரங்கணி பகுதியில் மலை ஏற்ற பயிற்சிக்காக சென்ற பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காட்டுத் தீயில் சிக்கி பலியானார்கள். இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்கப்பட்டது.

விசாரணையில் கிடைத்த தகவல்களை வைத்து, பல ஐ.எப்.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வனத்துறை முடிவு செய்தது. அதனடிப்படையில் நேர்மையான அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகளை அரசு வழங்கியுள்ளது.

மேலும், வனத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக பணி மூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்யப்படாமல் இருந்து வந்தது. இதுபோன்ற காரணங்களை முன்வைத்து ஐ.எப்.எஸ். அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் முதன்மைச் செயலாளர் நசிமுத்தீன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் (பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு) கயரத் மோகன்தாஸ் சென்னையில் இருந்து மத்திய மண்டலம் சேலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் (குன்னூர்) மேலாண்மை இயக்குனர் அசோக் உப்ரெதி, சென்னைக்கு கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலராக (இழப்பீட்டு காடுவளர்ப்பு நிதி மேலாண்மை, வன செட்டில்மெண்ட்) மாற்றப்பட்டார்.

கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்) சேகர்குமார் நிரஜ், வனவிலங்குகள் பாதுகாப்பு நிறுவன (ஏ.ஐ.டபுள்யூ.சி.) இயக்குனராக சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். தலைமை வனப்பாதுகாவலர் சுகடோ தத், கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலராக (சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்கம்) பதவி உயர்வு அளிக்கப்பட்டு சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை வனப்பாதுகாவலர் (தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டம்) விரேந்திரசிங் மாலிக், கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலராக (குறியீடுகள் மற்றும் கையேடு) பதவி உயர்வோடு சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை வனப்பாதுகாவலர் (ஆராய்ச்சி) மிடா பானர்ஜி கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலராக பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தலைமை வனப்பாதுகாவலர் (பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தென்னக குழு) லிமாதோஷி, கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலராக (பாதுகாப்பு, கண்காணிப்பு, வனங்கள், வனங்கள் குற்றப் பிரிவு) சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

தலைமை வனப்பாதுகாவலர் ஏ.உதயன், கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலராகவும் (பல்லுயிர் பாதுகாப்பு), பல்லுயிர் பாதுகாப்பு வாரிய உறுப்பினர் செயலாளராகவும் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தலைமை வனப்பாதுகாவலரும் அரசு ரப்பர் கழகத்தின் (நாகர்கோவில்) இயக்குனருமான ராகேஷ் குமார் டோக்ரா, கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலராக (நிர்வாகம்) பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னைக்கு மாற்றப்பட்டார்.

தலைமை வனப்பாதுகாவலரும் களக்காடு முண்டந்துறை கள இயக்குனருமான ஏ.வெங்கடேஷ், கூடுதல் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலராக (புலிகள் திட்டம்) சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதல்வர் தீபக் ஸ்ரீவத்சவா, தலைமை வனப்பாதுகாவலராக (ஆராய்ச்சி) சென்னைக்கு மாற்றப்பட்டார்.

தேனி மாவட்ட வன அதிகாரி இ.ராஜேந்திரன், கடலூர் மாவட்ட வன அதிகாரியாக மாற்றப்பட்டார். கரூர் மாவட்ட வன அதிகாரி எஸ்.செண்பகப்பிரியா, முதுமலை புலிகள் சரணாலய துணை இயக்குனராக மாற்றப்பட்டார்.

நெல்லை உதவி வனப் பாதுகாவலர் எஸ்.கவுதம், தேனி மாவட்ட வன அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆர்.கே.உபாத்யாய், முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக (வனப் படைகள் தலைவர்) மாற்றப்பட்டார். சென்னை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (சமூக காடுகள் மற்றும் விரிவாக்கம்) டி.பி.ரகுநாத், சென்னை தலைமை வன உயிர்கள் காப்பாளராக மாற்றப்பட்டார்.

சென்னை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (துறைத் தலைவர்) எச்.பசவராஜூ, முதன்மை தலைமை வனப் பாதுகாவலராக (ஆராய்ச்சி மற்றும் கல்வி) மாற்றப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story