சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகம் முற்றுகை கம்யூனிஸ்டு கட்சியினர் 70 பேர் கைது


சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகம் முற்றுகை கம்யூனிஸ்டு கட்சியினர் 70 பேர் கைது
x
தினத்தந்தி 4 May 2018 10:30 PM GMT (Updated: 4 May 2018 8:22 PM GMT)

நீட் தேர்வு மையம் ராஜஸ்தானில் ஒதுக்கியதை கண்டித்து சென்னையில் உள்ள சி.பி. எஸ்.இ. மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பத்தூர்,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரியும், நீட் தேர்வில் பங்கேற்க உள்ள 5,376 பேருக்கு ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கியதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மாலை வரை இந்த ஆர்ப்பாட்டம் நீடித்தது. பின்னர் போலீசாரின் வேண்டுகோள்படி அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி மண்டல இயக்குனரை சந்தித்து மனு கொடுத்தனர். அலுவலக நுழைவாயில் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலக ஊழியர்கள் வெளியேற முடியாதவாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் பாலகிருஷ்ணன் உள்பட 70 பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். நேற்று காலையில் இருந்து பல்வேறு தரப்பினர் சி.பி.எஸ்.இ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story