மாநில செய்திகள்

‘சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவழிக்க வேண்டாம்’ மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை + "||" + Social networks Do not spend time Edappadi Palanisamy advice to the students

‘சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவழிக்க வேண்டாம்’ மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை

‘சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவழிக்க வேண்டாம்’ மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
சமூக வலைதளங்களில் தங்களது பொன்னான நேரத்தை செலவழிக்க வேண்டாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
சென்னை,

சென்னையில் பச்சையப்பன் கல்லூரியின் 175-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு 175-வது ஆண்டு விழாவையொட்டி கட்டப்பட்ட வளைவை திறந்து வைத்து, விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.


பழமையும், பெருமையும் மிக்க பச்சையப்பன் கல்லூரியில் படிப்பதும், பணிபுரிவதும் பெருமையாகும். பச்சையப்பன் கல்லூரியில் படித்த அண்ணா மட்டும் தான் அறிஞர் என்றும், பின்னர் பேரறிஞர் என்றும் மக்களால் அழைக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராகவும் ஆனார்.

இந்த நாட்டின் எதிர்காலமும், சொத்தும் மாணவர்கள் தான் என்று கருதிய ஜெயலலிதா மாணவர்கள் பெரிதும் பயன்பெறும் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார். அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தினார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகு தான் குக்கிராமங்களில் இருந்து படித்து வந்த இளைஞர்கள் கூட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் இந்திய தொழில்நுட்ப தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெற தொடங்கினார்கள்.

2011-ம் ஆண்டு வரை உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 21 சதவீதமாக இருந்தது. ஆனால் ஜெயலலிதாவின் ஆசியுடன் செயல்படும் தற்போதைய ஆட்சியில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 46.90 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஜெயலலிதா, கல்வியில் செய்த புரட்சி தான் காரணம். இன்றைக்கு உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிக்கிறது.

கவனத்தை சிதறடிக்கும் ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள், சின்னத்திரை, பெரிய திரை போன்றவற்றில் மாணவர்கள் தங்களது பொன்னான நேரத்தை செலவழிக்க வேண்டாம். போலியான அவதூறான செய்திகள் அலங்காரமாக வந்து உங்களை மயக்கும். அதையெல்லாம் நம்பி திசை மாறி விடாதீர்கள். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழாவில் பச்சையப்பன் அறக்கட்டளை குழு தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன் வரவேற்றுப்பேசினார். இதில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் விஜயகுமார் எம்.பி., பச்சையப்பா அறக்கட்டளை அறங்காவலர்கள் வி.ராமநாதன், ஆர்.பிரபாகரன், கே.ஹேமநாத், வி.துரைமோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ்.காளிராஜ் நன்றி கூறினார்.