மணல் கடத்தல் அனுமதி: அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட்டு உத்தரவு


மணல் கடத்தல் அனுமதி: அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 May 2018 10:45 PM GMT (Updated: 5 May 2018 8:48 PM GMT)

லஞ்சம் பெற்றுக்கொண்டு மணல் கடத்தலை அனுமதிக்கும் பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் துறிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாபு. மணல் கடத்தியதாக இவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, பாபு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

கலெக்டரின் குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்து விட்டு தனது கணவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று பாபுவின் மனைவி வேதியம்மாள், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ராமதிலகம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சாதாரண பொதுமக்கள் மீது இதுபோன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. லஞ்சம் பெற்றுக்கொண்டு மணல் கடத்தலை அனுமதிக்கும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?’ என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், இதுதொடர்பாக 8-ந் தேதிக்குள் தமிழக அரசும், காவல் துறையும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் டி.ஜி.பி. நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.

Next Story