வியாபாரிகள் மீது மத்திய-மாநில அரசுகள் இருமுனை தாக்குதல் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


வியாபாரிகள் மீது மத்திய-மாநில அரசுகள் இருமுனை தாக்குதல் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 May 2018 12:00 AM GMT (Updated: 5 May 2018 9:05 PM GMT)

மத்திய-மாநில அரசுகள் வியாபாரிகள் மீது இருமுனை தாக்குதல் நடத்துக்கிறது என்று வணிகர் தின மாநாட்டில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நடத்திய வணிகர் தின மாநாட்டில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது.

வணிகர்கள் கோரிக்கையை நிறைவேற்ற எந்த தியாகத்தையும் செய்யும் போராளியாக விக்கிரமராஜா திகழ்ந்து வருகிறார். வணிகர்களின் நண்பராக தி.மு.க.வும், கருணாநிதியும், தி.மு.க. ஆட்சியும் இருந்திருக்கிறது. எனவே அந்த உரிமையில் தான் உங்கள் மாநாட்டில் கலந்துகொள்ள எனக்கு மற்றவர்களை விட அதிக உரிமை உள்ளது.

இன்று இங்குள்ள சூழ்நிலையில் வர்த்தகத்தின் மீது இருமுனை தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒரு மத்திய ஆட்சி, இரண்டு மாநில ஆட்சி. இரண்டு அரசுகளுமே வணிகர்கள் மீது இருமுனை தாக்குதல் நடத்துக்கிறது.

2 தேதிகளை நீங்கள் மறந்து விட முடியாது. 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுத்து வணிகர்களை ரத்தக்கண்ணீர் வடிக்க வைத்த நாள் அது. 2-வது 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி ஜி.எஸ்.டி.சட்டம் ஒரே நாடு ஒரே வரி என்ற அடிப்படையில் கொண்டு வந்து, அதன் மூலம் சிறுகுறு வியாபாரிகளை மிகவும் பாதிப்புக்குள்ளாகியது.

அப்போது நான் சட்டமன்றத்தில் வாதிட்டேன். கொஞ்ச நாள் அவகாசம் கொடுங்கள் என்றேன். செனட் கமிட்டிக்கு அனுப்புங்கள் என்று கூறிய போதும் சர்வாதிகாரப் போக்கில் மறுத்துவிட்டனர். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் இந்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.

தற்போது இந்த மாநாடு இந்திய வணிகர்களின் உரிமை மீட்பு மாநாடாக நடத்தப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், உரிமைகள் மட்டும் அல்ல, மாநில அரசின் உரிமைகளையும் மீட்கும் நிலை தான் உள்ளது.

கருணாநிதி ஆட்சியில் இருக்கும் போது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு 20 நாட்களுக்கு முன்பு, எந்த பொருட்களுக்கு வரி போடலாம், எந்த பொட்களுக்கு வரி குறைக்கலாம் என்பதை சம்பந்தப்பட்ட வணிகர்களை அழைத்து அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் வரியை நிர்ணயம் செய்வார்.

வணிகர்களுக்கு உரிமை வழங்கிய ஆட்சி தி.மு.க. தான். அதே போன்று உரிமையை மீட்டெடுக்க மாநிலத்தில் தி.மு.க.வும், மத்தியில் தி.மு.க. சுட்டிக்காட்டும் மதச்சார்ப்பற்ற ஆட்சியும் அமையும் போது, இதுபோன்று உரிமை மீட்பு மாநாடு நடத்த வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது.

விவசாயிகளும், வணிகர்களும் 2 கண்கள் என்று சொல்லுவார்கள். இன்றைக்கு 2 கண்களுமே பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஓராண்டு ரூ.20 லட்சம் விற்பனை செய்தால் அதற்கு ஜி.எஸ்.டி. இல்லை என்று சொல்லப்படுகிறது. இதை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பது வணிகர்கள் கோரிக்கை மட்டும் அல்ல, பா.ம.க.வின் கோரிக்கையும் தான்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரிவிலக்கு அளிக்கப்பட்ட சில பொருட்கள் இப்போது 12, 18 விழுக்காடு வரியாக செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டு இருக்கிறார்கள். 5 சதவீதம் அல்லது 12 சதவீதம் இருந்தால் போதும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

சிங்கப்பூரில் 7 சதவீதம் வரி. அங்கே ஓராண்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.15 ஆயிரம் போனசாக கொடுக்கிறார்கள். அந்த நிலைமை இங்கு எப்போது வரும் என்று நாம் அந்த நாளை எதிர்பார்ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் பேசும்போது, ‘வணிகர்களுக்காக குரல் கொடுக்கிற ராஜாவாக விக்கிரமராஜா இருக்கிறார். கோடீஸ்வரர்களால் கோடீஸ்வரர்களுக்காக மோடி ஆட்சி நடைபெறுகிறது. உலகின் மிகப்பெரும் கந்துவட்டிக்காரர் மோடி. உச்சபட்ச ஜி.எஸ்.டி. வரி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்யப்படும். இன்றைக்குள்ள அரசாங்கம் அம்பானிம் அதானிகளுக்கானது. தினமும் அல்லல் படும் விவசாயிகளுக்கானதல்ல. ஆளும்கட்சி பந்த் நடத்தினாலும் அதை வெற்றியடைய செய்ய வைக்கிற பொறுப்பு வணிகர்களுக்குத்தான் உள்ளது. மூன்றாவது அணி நாலாவது அணியெல்லாம் ஆட்சிக்கு வர முடியாது. ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமையும்.’ என்றார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசும்போது, ‘நேர்மையின் அடிப்படையில் அர்ப்பணிப்பு உணர்வோடு பொருளாதாரத்தில் உயர்த்தும் உணர்வு வணிகர்களுக்கு உள்ளது. வணிகர்களோடு இணைந்து அவர்களுக்கு இருக்கும் தடைகளை அகற்ற த.மா.கா. உடன் இருக்கும். வணிகர்களுக்கு 10-ந் தேதி விருது வழங்கும் விழாவை த.மா.க. நடத்தும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.’ என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசும்போது, ‘வணிகர்களின் உரிமைகளை அரசும், அரசின் கொள்கையும் பறிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் ஆதரவாக இந்திய அரசின் பொருளாதார கொள்கை இருக்கிறது. வணிகம் என்பது மிக மோசமான நிலையில் உள்ளது.’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசும்போது, ‘இன்றைக்கு ஒவ்வொன்றையும் காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் தற்போது இந்தியா மாட்டியுள்ளது. ஒன்றுமையாக இருந்து நம் உரிமையை நாம் மீட்டெடுக்க வேண்டும்.’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும்போது, ‘பட்டினி நிறைந்து கொண்டிருக்கும் இந்த நாட்டில் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி போட்டு இருக்கிறார்கள். ரூ.7 லட்சம் கோடி வரி வசூல் செய்திருப்பது சாதனை அல்ல. ஏழை மக்களை சுரண்டி இருக்கிறார்கள் என்று அர்த்தம். நாம் வணிகர் உரிமை மாநாடு நடத்தினால் போதாது, இந்த தேசத்தை மீட்கும் மாநாடும் நாம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.’ என்றார்.

Next Story