மாநில செய்திகள்

நிருபர்களிடம் கடும் கோபத்துடன் சீறிய தமிழிசை சவுந்தரராஜன் + "||" + The reporters were furious with anger Tamilnadu Soundararjan

நிருபர்களிடம் கடும் கோபத்துடன் சீறிய தமிழிசை சவுந்தரராஜன்

நிருபர்களிடம் கடும் கோபத்துடன் சீறிய தமிழிசை சவுந்தரராஜன்
நீட் தேர்வு தொடர்பான தொடர் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாததால் நிருபர்களிடம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கோபத்துடன் சீறினார்.
சென்னை,

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் நீட் தேர்வு தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

நிருபர்:-டி.என்.பி.எஸ்.சி., காவலர் தேர்வுகளில் 7 லட்சம் பேர் எழுதுகிறார்கள். அவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் அமைக்கப்படுகிறது. ஆனால் நீட் தேர்வுக்கு மட்டும் ஏன் தமிழகத்தில் மையங்கள் அமைக்க கூடாது.


டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-ஒரு லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் தமிழகத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது டி.என்.பி.எஸ்.சி., காவலர் தேர்வு போன்று கிடையாது.

நிருபர்:-தமிழகத்தில் எவ்வளவு பெரிய கட்டமைப்பு இருக்கிறது. ஆனால் சி.பி.எஸ்.இ.க்கு தமிழகத்தின் கட்டமைப்பு தெரியாமல் நீட் தேர்வு மையத்தை வெளிமாநிலங்களில் அமைத்தது ஏன்?.

தமிழிசை சவுந்தரராஜன்:-நீங்கள் இப்படி அடுத்தடுத்து கேள்வி கேட்டால் எப்படி?, நீங்கள் கேட்கும் கேள்வி எனக்கு தெரியும். என்னமோ நான் தவறு செய்தது போல் பேசக்கூடாது. நடைமுறை சிக்கல்களை நான் கூறுகிறேன். ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு இங்கே தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இது டி.என்.பி.எஸ்.சி. தேர்வு போன்று கிடையாது. எல்லோருமே கம்ப்யூட்டரில் பயன்படுத்தி...

நிருபர்:-மேடம் நாங்கள் கேட்ட கேள்வி...

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-தம்பி...தம்பி...தம்பி நான் சொல்வதை கேளுங்கள். கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கிறீர்கள். நான் பதில் சொல்ல வேண்டாமா? (இவ்வாறு அவர் நிருபர்களிடம் கோபத்துடன் சீறினார்.)

நிருபர்:-சொல்ல வேண்டும் மேடம், ஆனால் நீங்கள் சொல்வது மழுப்பலாக இருக்கிறதே?

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:- என்ன மழுப்பல் இருக்கிறது. என்ன பதில் வேண்டும்?. (கடும் கோபமாக).

நிருபர்:-இவ்வளவு கட்டமைப்பு இருந்தும் தமிழக மாணவர்களுக்கு சிக்கிம், ராஜஸ்தான் மாநிலங்களில் மையம் அமைத்தது ஏன்? இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?.

டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-ஒரு நிமிடம், நான் சொல்வதை கேளுங்கள். நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்குள் நீங்கள் அடுத்த கேள்வியை கேட்கிறீர்கள். இப்படி கேள்வி கேட்டால் எப்படி?. சி.பி.எஸ்.இ.யிடம் கேள்வி கேட்டாலும் அவர்கள் பதில் சொல்ல அவகாசம் தர வேண்டும் அல்லவா?. கேமரா முன்னால் இப்படி தான் நடந்து கொள்வீர்களா?.

தொடர்ந்து மாறி, மாறி நிருபர்கள் நீட் தொடர்பான கேள்விகளை முன் வைத்ததால் கடைசியில், நீட் தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ.யை கண்டிப்பதாக தெரிவித்து விட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை