‘சில்லரை வணிகத்தில் அந்நிய ஆதிக்கத்தை வீழ்த்த முடியும்’ த.வெள்ளையன் பேச்சு


‘சில்லரை வணிகத்தில் அந்நிய ஆதிக்கத்தை வீழ்த்த முடியும்’ த.வெள்ளையன் பேச்சு
x
தினத்தந்தி 5 May 2018 11:00 PM GMT (Updated: 5 May 2018 10:17 PM GMT)

‘வணிகர்கள், விவசாயிகள் ஒருங்கிணைந்து போராடினால்தான் அந்நிய ஆதிக்கத்தை வீழ்த்த முடியும்’ என்று காஞ்சீபுரத்தில் நடந்த மாநாட்டில் வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மே 5-ந் தேதி வணிகர் தினவிழா கொண்டாடப்படுகிறது. 35-வது வணிகர் தினவிழா வணிகம், விவசாயம் மற்றும் சுயதொழில்கள் மீட்பு மாநாடு காஞ்சீபுரம் பல்லவன் பொறியியல் கல்லூரி வளாகம் வெள்ளகேட் அருகில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.தேவராஜ் வரவேற்றார்.

மாநாட்டில், அகில இந்திய வர்த்தக சங்க தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, வர்த்தக சங்க பொதுச் செயலாளர் விஜய் பிரகாஷ் ஜெயின், உலக தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன், பொதுவுடமை இயக்க தலைவர் இரா.நல்லக்கண்ணு, சட்ட ஆலோசகர் வக்கீல் கே.பாலு, திரைப்பட இயக்குனர் கவுதமன், புதுச்சேரி வர்த்தக சங்க தலைவர் எம்.கே.ராமன் உள்பட பலர் சிறப்புரை ஆற்றினார்கள். இந்த மாநாட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் தங்களது குடும்பத்துடன் வருகை தந்தனர்.

மாநாட்டில் கூடங்குளம் சுப.உதயகுமார், தூத்துக்குடி பேராசிரியை பாத்திமா பாபு ஆகியோர் தலைமையில் என்ன செய்யப்போகிறோம்... நாம்? என்ற தலைப்பில் விவாத அரங்கம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாநாட்டில் த.வெள்ளையன் பேசியதாவது.

உலக வர்த்தக ஒப்பந்தத்தால் நமது நாட்டுக்கு கேடு ஏற்பட்டுள்ளது. பாரம்பரிய வணிகம், விவசாயம், அழிந்து வருகிறது. அந்நிய ஆதிக்கத்தால் சுயதொழில்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நாட்டின் அனைத்து துறைகளிலும் அந்நிய ஆதிக்கம் வலுப்பெற்றுள்ளது. ஆட்சியாளர்களின் உறுதுணை இருப்பதால் நமது தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டு தொழில் சுதந்திரத்தை இழக்கும் இக்கட்டான நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்தநிலை தொடருமானால் அந்நிய சக்திகளின் ‘கை’ மேலோங்கும். அது நம் நாட்டின் தற்சார்பு பொருளாதாரத்தை வீழ்த்தி அந்நிய பொருளாதாரத்தை புதை குழியில் சிக்க வைத்து விடும். இறுதியில் நம் நாட்டின் சுதந்திரத்தை நாம் இழக்க நேரிடும்.

வணிகர்கள், விவசாயிகள், சுயதொழில் புரிவோர், ஒருங்கிணைந்து போராடினால் மட்டுமே சில்லரை வணிகத்தில் அந்நிய ஆதிக்கத்தை வீழ்த்த முடியும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் 35-வது வணிகர் தினவிழா மாநில மாநாடு வணிகம், விவசாயம் மற்றும் சுயதொழில்கள் மீட்பு மாநாடாக நடைபெற்று வருகிறது.

நம் நாட்டு சில்லரை வணிகத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்றே ஆன்லைன் வணிகத்தை அனுமதித்து உள்ளனர். நமது ஆட்சியாளர்கள் அந்நியரின் ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். நாட்டையும், நம்மையும் அழிவுப்பாதைக்கு அவர்கள் கொண்டு செல்கிறார்கள்.

மக்கள் பாதிக்கப்படுவதையும், மக்களின் சுயதொழில்கள் அந்நியரின் கைகளில் சிக்கி கொள்வதையும், பொதுத்துறைகள் அந்நியரின் ஆதிக்கத்துக்குள் செல்வதையும் தடுக்க வணிகர்கள் ஓரணியில் திரள வேண்டும். இவ்வாறு த.வெள்ளையன் பேசினார். பின்னர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.

* தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக இழுத்து மூடப்படும் வரை வணிகர் சங்க பேரவை உறுதியுடன் போராடும்.

* காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழக மக்களையும் வேண்டுகிறோம்.

* காவிரி பிரச்சினையில், உச்சநீதிமன்றம் எச்சரிக்கை மட்டுமே விடுக்கிற வினோதமான போக்கை, நீதித்துறையின் கவனத்துக்கு கொண்டு வர இந்த மாநாடு கடமைப்பட்டிருக்கிறது.

* மத்திய அரசு புதிய விதை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதையும், மரபணு மாற்று விதைகளை ஊக்குவிப்பதையும், இந்த மாநாடு கடுமையாக கண்டிக்கிறது. பாரம்பரிய விதைகளை பாதுகாத்து இயற்கை வேளாண்மையை வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் விவசாயிகளை கேட்டுக்கொள்கிறது.

* ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ, அணு உலை போன்றவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்தி மண்ணின் வளத்தையும், மக்களின் வாழ்வுரிமையையும் நசுக்கும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கு கண்டிக்கத்தக்கது.

* சில்லரை விற்பனையில் ஆன்லைன் வணிகத்தை அனுமதித்துள்ள மத்திய அரசின் வணிகர் விரோத போக்கை வன்மையாக கண்டிக்கிறது.

* உள்நாட்டு நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அந்நிய நிறுவனங்களுக்கு தங்கள் தயாரிப்புகளை வினியோகிக்கக் கூடாது. அந்நியரை வீழ்த்தி சாதனை படைக்க அனைத்து துறை சார்ந்த வணிகர்களையும், உற்பத்தியாளர்களையும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. இதுபோன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Next Story