வெளிமாநிலத்துக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்றவர்கள் தனியார் பள்ளியில் படித்து இருந்தால் நிதி உதவி இல்லையா?


வெளிமாநிலத்துக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்றவர்கள் தனியார் பள்ளியில் படித்து இருந்தால் நிதி உதவி இல்லையா?
x
தினத்தந்தி 5 May 2018 10:41 PM GMT (Updated: 5 May 2018 10:41 PM GMT)

வெளிமாநிலத்துக்கு நீட் தேர்வு எழுத சென்றவர்கள் தனியார் பள்ளியில் படித்து இருந்தால் நிதி உதவி இல்லை என்ற தகவல் மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை,

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த பலருக்கு கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், சிக்கிம் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர். இதனால் மாணவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அவர்களுக்கு பயண கட்டணத்துடன் ரூ.1,000 நிதி உதவி வழங்க அரசு உத்தரவிட்டு இருந்தது.

தேர்வுக்கு புறப்படும் அவசரத்தில், அரசு வழங்குவதாக கூறிய நிதி உதவியை பெறாமல், மாணவர்களும், அவருடன் பயணிப்பவரும் (பெற்றோர் அல்லது உறவினர்) பலர் கடன் வாங்கித்தான், தேர்வுக்கு சென்று இருக்கிறார்கள். இந்த நிலையில் அரசு வழங்குவதாக அறிவித்து இருக்கும் நிதி உதவி என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதனால் தனியார் பள்ளியில் படித்த தமிழக மாணவர், வெளிமாநில மையத்தில் தேர்வு எழுத சென்று இருந்தாலும், அவருக்கு அரசு வழங்கும் நிதி உதவி கிடையாது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஏற்கனவே தேர்வு மையங்களை வெளி மாநிலத்தில் போட்டுவிட்டார்களே? என்ற வேதனையில் இருந்த மாணவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக இந்த தகவல் இருக்கிறது.
இதுகுறித்து தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர் சிலர் கூறியதாவது.

ஏற்கனவே தேர்வு மையத்தை இதுவரை பார்த்திராத வேறு மாநிலத்துக்கு ஒதுக்கிவிட்டார்களே? என்ற கஷ்டத்தில் இருந்தோம். அரசு அறிவித்த அறிவிப்பு ஓரளவு ஆறுதலாக இருந்தது. தற்போது அதுவும் கானல்நீர் போல ஆகிவிட்டது. இது மேலும் மன உளைச்சலை தருகிறது. எனவே அரசு இதில் பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் வழங்க வேண்டிய நிதி உதவியை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது.

இந்த விஷயத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு ‘நீட்’ தேர்வு எழுத சென்ற தேர்வர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் திரும்பி வந்ததும் பயண கட்டணத்துடன் நிதி உதவி வழங்கிட வேண்டும்.

அதேபோல், தமிழ்நாட்டுக்குள் வெகு தொலைவில் தேர்வு மையம் அமைக்கப்பட்ட தேர்வர்களுக்கும் பயண கட்டணத்தை அரசு வழங்க வேண்டும். நீட் தேர்வு மையம் அமைப்பதில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் மாணவர்கள் நலனில் சிறிதும் அக்கறை கொள்ளவில்லை. மாநில அரசையும் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. நீட் தேர்வு தேவையில்லை என்பதுதான் எங்களுடைய கருத்து. இதுதான் நிரந்தர தீர்வு. இவ்வாறு அவர் கூறினார். இதே கருத்தை கல்வியாளர் கள் பலரும் தெரிவித்தனர்.

Next Story